ரயிலில் சென்னைக்கு செல்லும் பகல் பயணத்தின் போது சேலத்தில் ஒரு வயதான பாட்டி கூடை நிறைய மாம்பழத்துடன் எங்கள் பெட்டியில் ஏறிச்சு.
மாம்பழம் ஒவ்வொன்றும் மெகா சைசில் இருந்தது.
“என்ன விலை பாட்டி?” என்று கேட்ட போது, “ஒரு பழம் 80 ரூவா கண்ணு!” என்று சொன்னது.
ஒவ்வொரு பழமும் குறைந்தது ஒன்றரை கிலோவாவது இருக்கும்.
“சரி பாட்டி! ரெண்டு பழம் கொடுங்க.” -ன்னு காசு கொடுத்து வாங்கிக்கொண்டேன்.
என்னிடம் வியாபாரத்தை முடித்து கொண்டு பாட்டி பக்கத்து பெட்டிக்கு போய் விட்டது. வண்டி ஜோலார்பேட்டை நெருங்கும் போது அந்த பாட்டியை பார்த்தேன் .
எல்லா பழங்களும் விற்று தீர்ந்திருந்தது.
மெல்ல நடந்து வந்து என் அருகில் வந்தவுடன் பாட்டி அதன் மடியில் கட்டி வச்சிருந்த ஒரு பெரிய மாம்பழத்தை எடுத்து என்கிட்டே கொடுத்தாங்க.
“பாட்டி! ஏற்கனவே ரெண்டு பழம் வாங்கிட்டோம்ல. போதும் எங்களுக்கு. எங்க வீட்டில் மொத்தமே நாலு பேர்தான். இதுவே ரொம்ப அதிகம்” னு சொன்னேன்.
அதுக்கு அந்த பாட்டி, “இல்ல கண்ணு! அந்த கோச்சுல எல்லாம் அம்பது ரூவாய்க்கு கொடு கொடுன்னு கேட்டு வாங்கிட்டாங்க. நீ என்கிட்டே பேரம் பேசல. எனக்கு மனசே கேக்கல. ராத்திரி தொண்ட குழில சோறு இறங்காது .இந்த பழத்துக்கு நீ ஏற்கனவே காசு கொடுத்தாச்சு. வாங்கிக்க கண்ணு”-ன்னு சொல்லிச்சி”
அந்த பாட்டியின் நேர்மையை பார்த்து கண்களில் மெல்லிய நீர் படலம் படர்ந்து கண் ஓரங்களில் கண்ணீர் தேங்கியது.




