
Oplus_131072
“அப்பா ….”
“என்னடா …
“தாத்தாவையும் பாட்டியையும் பாக்கணும் போல இருக்குப்பா … ”
“ஞாயிற்றுக்கிழமை போலாம் …”
“இவ்ளோ பெரிய வீடு இருக்கு. எதுக்கு அவங்கள எங்கையோ கொண்டு போய் வச்சிருக்கீங்க.? எப்பவாச்சும் பாக்கப் போகும் போதெல்லாம் அவங்க எப்படி அழுவுறாங்க தெரியுமா …? ”
“எங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போனு உங்கிட்ட கேட்டாங்களா …?”
“ஒருதடவை கூட அப்படி கேட்டதில்லப்பா. நல்லா படிக்கணும் , நல்லா சாப்பிடணும், அப்பா அம்மா பேச்சு கேட்டு சமத்தா இருக்கணும் இப்படித்தாம்ப்பா சொல்வாங்க. ஆனா போய்ட்டு வரேன்னு சொன்னதும் கையப் புடிச்சுக்குவாங்க. அவங்க கண்ணெல்லாம் கலங்கும். கையெல்லாம் நடுங்கும்பா…. ”
“இப்ப என்ன பண்ணனும்கிறே .. அவங்கள போய் பாத்துட்டு வரணுமா , வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா….? ”
“அவங்கள நம்ம கூடவே வச்சுக்கலாம்ப்பா …”
“சரி … நான் சொல்ற மாதிரி செஞ்சீன்னா தாத்தாவும் பாட்டியும் வீட்டுக்கு வந்துருவாங்க … ”
“என்ன செய்யணும் சொல்லுங்க … என்ன வேணா செய்றேன்ப்பா … ”
அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்பா விளக்கமாக சொல்கிறார். இரண்டு நாட்கள் கடந்து வந்த ஒரு சனிக்கிழமை அரைநாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த மகன் கையில் ஒரு பரிசுக் கோப்பையோடு அம்மாவைத் தேடுகிறான்.
“அம்மா … அம்மா …. ”
“என்னடா செல்லம் …”
“பள்ளிக்கூடத்துல எனக்கு பரிசுக் கோப்பை குடுத்தாங்கம்மா …”
“அப்படியா .. வெரிகுட் … எதுக்காக குடுத்தாங்க …?”
“என் வீடு – அப்படிங்கற தலைப்புல ஓவியப் போட்டி வச்சாங்க. நான் ஒரு வீடு கட்டுனா எத்தனை அறை இருக்கும் . அதுல யாரெல்லாம் இருப்பாங்க. வீட்டைச் சுத்தி எப்படிப் பராமரிப்பீங்க வீடு என்ன டிசைன்ல இருக்கும் …. இது மாதிரி அம்சங்களோட எங்க கனவு வீட்டை வரைஞ்சு குடுக்கச் சொன்னாங்க…. ”
“ஓஹோ … நீ எப்படி வரைஞ்சே ..?”
“நான் நம்ம வீட்டையே ரோல் மாடலா வச்சு வரைஞ்சேன் … ”
“சூப்பர் … அதான் பரிசு கிடைச்சிருக்கு. இது உன் அப்பா டிசைன் பண்ண வீடாச்சே … நீ வரைஞ்ச படத்தைக் காட்டேன் பார்க்கலாம் … ”
“இந்தாங்கம்மா …. ”
“அடடா அழகா இருக்கே .. முன்னால ஒரு பூந்தோட்டம். பின்னால ஒரு காய்கறித் தோட்டம். வீட்டைச் சுத்தி தென்னை, முருங்கை, பப்பாளி மரங்கள். சூப்பர்டா …. ”
“வீட்டுக்குள்ள பாருங்கம்மா … ”
“அய்யோ விசாலமான ஹால் , ஹாலோட ரெண்டு பக்கமும் அறைகள். ஒண்ணு உனக்கும் உன் மனைவிக்கும்… ஓக்கே. ஒண்ணு உன் குழந்தைகளுக்கு. டபுள் ஓக்கே . எதிர்த்தாப்புல கிச்சன். அதுக்கு பக்கத்துல ஒரு ரூம் பூட்டிக் கிடக்குதே ஏன் ….? பாத்ரூமா …? எங்களோட ரூம் எங்கே …? ”
“அய்யோ அம்மா பாத்ரூம் வெளிய இல்ல. மூணு ரூம்லயும் அட்டாச்டு. பூட்டிக்கிடக்குதே அதுதான் உங்க ரூம். அதுல என்ன எழுதி இருக்கேன்னு படிச்சுப் பாருங்க …. ”
“அப்பாவையும் அம்மாவையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதால் பூட்டப்பட்டிருக்கிறது … ”
“என்னடா இப்படி எழுதி இருக்கிறே … ”
“உங்களை விட பரவாயில்லைல அம்மா. நீங்க தாத்தாவையும் பாட்டியையும் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு அவங்க ரூமை ஸ்டோர் ரூம் ஆக்கிட்டீங்க… ஆனா நான் உங்களை முதியோர் இல்லத்துல சேர்த்தாலும் உங்க ரூமை உங்க ரூமா மட்டும்தான் வச்சிருக்கேன் … இந்த ஒரு பாய்ண்ட்டுக்குதாம்மா எனக்கு முதல் பரிசே கிடைச்சுது …! ”
“அடப் போடா நீயும் உன் பாய்ண்ட்டும் …. ”
****
“ஏங்க நான் ஸ்டோர் ரூமை சுத்தம் பண்றேன். நீங்க காரை ரெடி பண்ணுங்க …. போய் அத்தையும் மாமாவும் கூட்டிட்டு வந்துரலாம்….. ”
“என்ன திடீர்னு …. நாளைக்குத்தானே ஞாயித்துக்கிழமை … இன்னைக்கே பாக்கப் போலாம்ங்கிறே … நாளைக்கு ஏதாவது புரோகிராம் வச்சிருக்கியா …? ”
“மண்ணாங்கட்டி … நாம அவங்களை பாக்கப் போகல கூட்டிட்டு வரப் போறோம் … ”
“கனவேதும் கண்டியா … அவங்களை கூட்டிட்டு வந்து கொஞ்சநாள் வீட்டுல வச்சிருக்கணும்னு … ”
“கனவு இல்லைங்க. பையன் கற்றுத்தந்த பாடம். அவங்கள நிரந்தரமா நம்ம கூடவே வச்சுக்கப் போறோம். அதுவும் ராஜா ராணியாட்டம்… ”
காரை ரெடி செய்வது போல் போர்டிகோ சென்ற அப்பாவும் மகனும் உள்ளங்கைகள் உயர்த்தி தட்டிக் கொண்டார்கள்.
“செம நடிப்புடா மகனே … ”
“நீங்க சொன்னபடி செஞ்சேன். செம மூளைப்பா உங்களுக்கு … ”
இவர்களைப் பார்த்ததும் வாயகலச் சிரிக்கப் போகும் தாத்தா பாட்டியைப் போல, காசுக்கு வாங்கிய அந்த பரிசுக்கோப்பையும் வாய் விரிய சிரித்துக் கொண்டிருந்தது.