அப்பாவைத் தவற விடாதீர்கள்… உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்..!!

இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு.

சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்தப் பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது ‘அப்பா’ என்று திரையில் வர அந்தப் போனை கட் செய்து கொண்டே இருந்தார்.

“ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார் பேசலாமே” என்று சொன்னேன்.

“சும்மா எங்கிருக்க எங்கிருக்கன்னு கேட்பாருங்க” என பதில் சொன்னார்.

அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது.

“அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிடனும் பின்னால பேசாமல் விட்டுவிட்டோம்னு வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை” என சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொல்லவில்லை. காரணம் சிலவற்றின் அருமையை இழந்து தான் புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கும். சொன்னால் யாருக்கும் புரியாது.

சென்னையிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் குறைந்தது ஐந்தாறு முறையாவது அப்பாவின் போனிலிருந்து அழைப்பு வந்து விடும்.

“பஸ் ஏறிட்டியா?”

” சாப்டியா?”

“மேல்மருவத்தூர் தாண்டிட்டியா?”

“சிதம்பரம் வந்துட்டியா?”

என ஏதாவது ஒன்றைக் கேட்டு அழைத்துக் கொண்டே இருப்பார்.

“சரிப்பா..வந்துடறேன்ப்பா” என்ற பதிலை ஒவ்வொரு அழைப்பிலும் சொல்லிக் கொண்டிருப்பேன்.

இரவுப் பயணம் செய்தால் பேருந்து விடியற்காலையில் நான்கு மணிக்கு ஊரை நெருங்கும். அந்நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பேன். அதனாலேயே மயிலாடுதுறை வரைக்கும் சென்று டீ குடித்து விட்டு விடிந்ததும் ஊருக்கு பஸ் ஏறுவேன்.

ஆனால் மிகச்சரியாக வைத்தீஸ்வரன் கோயிலைத் தாண்டியதுமே அப்பாவிடம் இருந்து அழைப்பு வரும்.

“எறங்கப் போறியா தம்பிய வரச் சொல்லட்டுமா?” என்று அரைத்தூக்கத்தில் தம்பியை எழுப்பி வண்டியைக் கொடுத்தனுப்புவார்.

எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் பேருந்து ஏறியதுமே அவரும் மனதளவில் என்னோடு பயணம் செய்து கொண்டிருந்தாரோ என்று தோன்றும்.

பகல் நேரப் பயணம் என்றால் இரவு எத்தனை மணியானாலும் நான் வீட்டிற்கு வரும் வரை விழித்திருப்பார்.

பேக்கை கழற்றி வைக்கும் போது துவைத்த லுங்கியைக் கையில் தருவார்.

“சாப்ட்டு படு” என்ற ஒரு ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டுத் தான் படுக்கச் செல்வார்.

மறுநாள் காலை எழுந்து தான் எல்லாவற்றையும் விசாரிப்பார்.

ஆனால் வீட்டிற்கு வந்து அரை நாளிலேயே எங்களுக்குள் ஏதோ ஒரு வாக்குவாதம் தொடங்கி விடும்.

“வரணும் வரணும்னு கூப்பிட்டது இப்படி சண்டை போடுறதுக்குத் தானா?” என்று கேட்பேன்.

“நான் எது சொன்னாலும் நீ மறுத்துப் பேசறியே” என்பார் அப்பா.

அடுத்த சில நிமிடங்களில் எதையாவது பற்றி நானே பேச்சுக் கொடுப்பேன்.

அல்லது அவரே ஏதாவது பேசுவார்.

எந்த சண்டையையும் இருவருமே நீடிக்க விட்டதே கிடையாது.

வாக்குவாதங்கள், சண்டைகள் வெறும் நீர்க்குமிழிகளாகவே எங்களுக்குள் இருந்திருக்கின்றன.

இந்த முறை மயிலாடுதுறையை நெருங்க நெருங்க அப்பாவிடமிருந்து அழைப்பு வருகிறதா என அனிச்சையாக போனை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். என்னையறியாமல் அப்பா என டயலில் டைப் செய்து பின் டெலிட் செய்தேன்.

வீட்டு வாசலில் நின்று “வாப்பா நல்லாருக்கியா?” என்று கேட்கும் அப்பாவின் குரலைக் கேட்க முடியவில்லை.

பூச்சரம் போடப்பட்ட அப்பாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் வருவது சொல்ல முடியாத பெருந்துயரம்.

மகன், பெண் பிள்ளைகள் அனைவர்க்கும் இந்தப் பதிவு படித்து உணருங்கள்…..

அப்பாவைத் தவற விடாதீர்கள்…

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.

Read Previous

விருப்ப ஓய்வு.. சிறுகதை..!! சிறிது நேரம் இருந்தால் கண்டிப்பாக படித்துப் பாருங்கள்..!!

Read Next

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!! இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular