அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது..!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). பட்டதாரி ஆசிரியரான இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த எலசவாடி அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலா. கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து பெற்று விட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி சரவணன், கலாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கி வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஜீவனாம்சம் வழங்க ஆத்தூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி, கலாவிடம் நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை சரவணன் வழங்கி உள்ளார். அந்த உத்தரவு உண்மையானதா? என அறிந்து கொள்ள, கலா ஆத்தூர் நீதிமன்றத்திற்கு சென்ற விசாரித்துள்ளார். அப்படி எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. உடனே கலா, ஆத்தூர் நீதிமன்றத்தில், போலி ஆணை பற்றி தெரிவித்தார். இதையடுத்து ஆத்தூர் ஜே. எம். 2 நீதிமன்ற ஊழியர் செல்வி, ஆத்தூர் டவுன் போலீசில் போலியான நீதிமன்ற உத்தரவு ஆணை தயாரித்து வழங்கியவர்கள் மீது புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், ஆசிரியர் சரவணன் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் இருக்க, போலி உத்தரவு ஆணையை தயாரித்து வழங்கியதும், இதற்கு ஆத்தூர் புனல்வாசல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (50) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த இருவரும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் ஆசிரியர் சரவணன் மற்றும் தமிழ்செல்வனை கைது செய்தனர். 10 மாதத்திற்கு பின் சிக்கிய இருவரையும், விசாரணைக்கு பின் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Read Previous

அழிஞ்சி குச்சி விற்பனை தீவிரம்..!!

Read Next

தேர்ச்சி பெற்றவர்கள் கலெக்டரிடம் மனு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular