நாமக்கல்லில் இருந்து நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று திருச்சி நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்பேருந்தை தா. பேட்டை அருகே உள்ள என். கருப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ் குமார் (38) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இதேபோல் திருச்சியில் இருந்து கான்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அமர்நாத் யாதவ் (44)என்பவர் கண்டெய்னர் லாரியை நாமக்கலில் இருந்து ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள செவந்த லிங்கபுரம் என்ற இடத்தில் வந்த போது லாரி ஓட்டுநர் அமர்நாத்யாதவ் கட்டுப்பாட்டை மீறி அரசு பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்து சாலையிலிருந்து இறங்கி ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பேருந்தும் சேதமடைந்தது. மேலும் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் சதீஷ் குமார் உட்பட 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதியினர் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முசிறி காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் அமர்நாத் யாதவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.