நம் வீடுகளில் அரிசி மற்றும் பருப்பு போன்ற பொருட்களில் புழுக்கள் இருப்பதை பார்த்திருப்போம். அதிக நாட்கள் சேமித்து வைக்கப்படும் பொருட்களில் இது போன்ற புழுக்கள் உருவாகின்றன. இது அதில் உள்ள சத்துக்களை உறிஞ்சி விடுகிறது. பொதுவாகவே சேமித்து வைக்கப்படும் பொருட்களில் வண்டுகள் மற்றும் புழுக்கள் உருவாகும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். அரிசியில் புழுக்கள் ஏற்படாமல் இருக்க சுத்தமான மற்றும் காய்ந்த பாத்திரத்தில் அரிசியை வைக்க வேண்டும். அதனை சுற்றி நீர் கோர்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசியில் பிரியாணி இலைகள், வர மிளகாய், பூண்டு மற்றும் கிராம்பு ஆகியவற்றை போட்டு வைத்தால் எளிதில் வண்டுகள் அல்லது புழுக்கள் தாக்காமல் இருக்கும். வாசனை மிகுந்த கற்பூரம், பிரியாணி இலைகள் மற்றும் கிராம்பு ஆகியவற்றை உங்களுக்கு விருப்பம் இருந்தால் பயன்படுத்தலாம். ஏனென்றால் சமைத்த பின்னர் அரிசியில் இதன் வாசனைகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. புழுக்களை விரட்ட வேப்பிலை, கிராம்பு மற்றும் கற்பூரவள்ளி இலைகளை பயன்படுத்தலாம்.
இதனை நேரடியாக அரிசியில் போடாமல் வெயிலில் காய வைத்து ஒரு துணியில் கட்டி அரிசி இருக்கும் கலன்களில் போட்டு வைக்கலாம். மேலும் அரிசிகளை முடிந்த அளவுக்கு நீண்ட நாட்களுக்கு சேமிப்பதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை நீங்கள் சேமித்து வைக்கலாம். அளவுக்கு அதிகமாக வாங்கும் போது இந்த புழுக்கள் அல்லது வண்டுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிக அளவில் உங்கள் வீட்டில் அரிசிகள் இருந்தால் மாதத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.