
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே மகனுக்கு அறிவுரை கூறிய தந்தை மற்றும் தாய் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தப்பிச் சென்ற மகனை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெடாராயணபுரம் அருகே சவுதேமண்டி பகுதியை சார்ந்தவர் பாஸ்கர் (வயது 61) இவரது மனைவி சாந்தா (வயது 60) பாஸ்கர் தனியார் ஹோட்டல் ஒன்றில் காசாளர் ஆக பணி புரிந்து வருகிறார். அவரது மனைவி சாந்தா மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர். இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சச்சின் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சரத் அவரது பெற்றோருடன் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சரத் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்று பாஸ்கர் தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராற்றல் ஆத்திரமடைந்த சரத் இரும்பு கம்பியால் தனது தந்தையை பலமாய் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த தாயையும் கடுமையாய் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் தாய் மற்றும் தந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து உள்ளனர்.
பின் வீட்டை பூட்டிவிட்டு சரத் அங்கிருந்து தப்பியுள்ளார். மறுநாள் காலை சச்சின் தனது தாய் தந்தையுடன் பேசுவதற்காக செல்போனில் அழைத்துள்ளார். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து பாஸ்கர் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பரம்கியது.
இதனை தொடந்து அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய சரத்தை காவல்துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர்.