
அலட்சியம்….
எங்கே போய்விடப்போகிறது? /
எங்கே போய்விடப்போகிறாள்? /
எங்கே போய்விடப்போகிறான்?
என்ற அதிக பட்ச அலட்சியம் தான்,
பல விடயங்களை தொலைப்பதற்கும்,
பல பெரிய பிரிவுகளிற்குமான,
முதல் ஆணிவேர்!
உண்மை என்னவென்றால், யாரும் யாருடனும்,
எப்பொழுதும்,
எந்த கணத்திலும் கூடவே வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை,
அப்படி ஒருவர் நம்மோடு இருக்கின்றார் என்றால்,
நாம் அவரை நன்றாக நடத்துகின்றோம் என்று தான் பொருள் கூற வேண்டும்!
உண்மையில்,
என்ன நடந்தாலும் இவர் என்னோடு இருப்பார்,
என்னை விட்டுச்செல்ல மாட்டார் என்பது மடத்தனம்!
இவள் எங்கே போய்விடப்போகிறாள்/ன் என்ற உங்கள் அசட்டு தனம்,
உங்களுக்காக இருப்பவர்களின் நேரத்தை வீணடிக்கிறது,
காரணமே கூறாமல் அவர்களை காத்திருக்க வைக்கிறது,
ஒரு கட்டத்தில், எத்தனை அன்பு இருந்தால் கூட,
உங்களை மெதுமெதுவாக அவர்கள் வெறுக்கத்துவங்குவார்கள்!
ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று கூறி,
ஐந்து மணிநேரமாக காணாமல் போனவர்களை,
கடந்திருக்கிறேன் நான்,
காரணம் எல்லாம்,
மறதியும், பிற வேலையும், பிற நட்பும்!
மறக்கும் அளவில் மதிப்பளிக்க முடியாத மனிதர்கள் என்று இங்கு யாரும் இல்லை,
உங்களுக்காக ஒருவர், பொக்கிஷமாய் தரும் நேரத்தை, மதிக்க தெரியாமல் மிதிப்பதற்கு பெயர்,
அன்பல்ல,
இவனாலோ, இவளாலோ என்னை விட்டுச்செல்ல முடியாது என்ற அலட்சியம்!
யாரும் யாரையும் விட்டுப்போகலாம்,
யாரும் யாருடனும் சேரலாம்,
அந்தந்த மனிதர்கள் நம்மோடு எப்படி உணர்கின்றார்கள் என்பதை பொறுத்தே தான்,
பிரிதலும் சேர்தலும் அன்றி,
எப்பொழுதும் கூடவே வருவார்கள் என்றெல்லாம்,
எழுதப்பட்ட விதிகள் இல்லை!
முதலில் ஒருமாதிரி,
இடையில் வேறோர் மாதிரி,
பின்பு ஏதோ மாதிரி மாறிக்கொண்டிருக்கும் உங்கள் fluctuated prioritisation குணவியல்புகளை தாங்கிக்கொள்ளும் பக்குவங்கள் உண்மையில்,
அடிப்படையில்,
மனித மனங்களிற்கு இல்லை,
ஒரு சில வேளைகளில் அவை சாத்தியப்பட்டாலும்,
வாழ்வு என்ற நீண்ட பயணத்தில் என்றோ ஒரு நாள் அது பிளவிற்கு உட்படத்தான்செய்யும்!
திமிர் என்ற விடயம் அழகானது,
இல்லை என்பதிற்கில்லை,
ஆனால் அன்பின் நிமித்தங்களாய் உருவாகும்,
அலட்சியப்போக்கு,
அருவருக்கத்தக்கது ;
ஏற்றுக்கொள்ள முடியாதது!
ஆக,
உங்களுடன்
அன்பாக,
அக்கறையாக,
பாசமாக யாரும் இருந்தால்,
அவர்களின் பொன்னான நேரத்தை உங்களிற்காக தந்தால்,
தர முன்வந்தால்,
அவர்களை மதியுங்கள்,
அவர்களின் முயற்சியை பாராட்டுங்கள்,
காரணம்,
அலட்சியத்தால் நீங்கள், ஒருவரின் அன்பினை இழந்தால்,
அவை வாழ்நாளில் மீளப்பெற முடியாத இடத்திற்கு சென்றுவிடும்,
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன,
செய்யாவிட்டால் என்ன?
மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்,
உங்கள் குழந்தைகளிற்கும் கற்றுக்கொடுங்கள்!