
அ. தி. மு. க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அ. தி. மு. க. வினர் திரளாக பங்கேற்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மாவட்டம் வாரியாக மூத்த நிர்வாகிகள் சென்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மாநாடு தொடர்பாக புதுக்கோட்டையில் வடக்கு, தெற்கு மாவட்ட அ. தி. மு. க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாலையீட்டில் ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம். எல். ஏ. தலைமை தாங்கி வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து முன்னிலை வகித்தார். மாநாட்டில் அ. தி. மு. க. மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான கே. பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ். பி. வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ. எஸ். மணியன், ஆர். பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பேசுகையில், மதுரையில் நடைபெற உள்ள மாநாடு வரலாற்றில் இதுவரை நடைபெறாத மாநாடாகவும், இது போன்று எவரும் நடத்த முடியாத வகையிலும் அமையும் எனவும், இந்த மாநாட்டிற்கு பின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றனர். மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ. தி. மு. க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்றனர். மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஓ. பன்னீர்செல்வம் அணியினர், அ. ம. மு. க. வினரை தி. மு. க. வின் பி டீம் என்றும் குறிப்பிட்டு சிலர் பேசினர். கூட்டத்தில் அ. தி. மு. க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ. தி. மு. க. வை சேர்ந்த 11 முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கான பேட்ஜ்களை ஒட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கூட்டம் நடக்கும் மண்டபத்திற்கு ஊர்வலமாக அ. தி. மு. க. வினர் வந்தனர். கூட்டத்தில் மாநாடு தொடர்பான லச்சினையை கல்லூரி மாணவிகளிடம் வழங்கி வெளியிட்டனர்.