
- ஆசியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி – கன்னியகுமாரியில் பரபரப்பு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூரில் மாணவி ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். இதற்கிடையே அந்த மாணவி தனது தோழி ஒருவரை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்ற மடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் அவருடைய தோழியிடம் விசாரித்த போது, மாணவிக்கும் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது மகளை ஆசிரியர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் ஆசிரியர் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் ஆசிரியருடன் மாணவி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் மாணவியின் பெற்றோருக்குத் தகவல் அளித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
இதேபோல், ஆசிரியரின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது போலீசாா் முன்னிலையில், மாணவியின் பெற்றோரும், ஆசிரியரின் பெற்றோரும் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டாரும் போலீசாரிடம் எழுத்துமூலமாக கடிதம் எழுதி கொடுத்தனர்.
திருமணம் நடக்கும் வரை மகள் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதற்கு மாணவியும், ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் மாணவி தனது பெற்றோருடன் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.