#பெண்களுக்கு ரிடையர்மெண்ட் ?
ஆண்களுக்கு மட்டும் தான் ரிடைர்மெனட். அது என்ன சாபம். பெண்களுக்கு அந்த மாதிரின்னு இல்லையா?
இது இயற்கையாக எழும் கேள்வி தான்.
பலமுறை நிறைய யோசித்ததுண்டு.
உண்மையிலேயே பெண்கள் இப்படி ஒரு வரத்தை பிறவிலேயே பெற்று வந்தார்களா?.இந்த ஐயமும் எனக்கு உண்டு.
வேலைக்கு போகும் பெண்களுக்கு ,வீட்டிலும் வேலை பளு. வேலைக்குச் செல்லு மிடத்திலும் சுமை.
இரண்டையும் சேர்த்து இழுக்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு.
ஒன்றை ஒன்று சமன் செய்து சாமர்த்திய மாக சமாளிப்பவர்களும் உண்டு.
இந் நிலை உயர் வர்க்கம் ,நடு வர்கம் மற்றும் அடித் தட்டு என அத்தனை பெண்களுக்கும், வித்தியாச மின்றி வியாபித்திருக்கிறது..
எதையும் இழுத்து போட்டு சுமக்கும் குணம் இயற்கையிலேயே அமைந்ததோடு, ஆசைக்கும், பாசத்திற்கும் ஆட்பட்டு அவர்கள் அல்லல் படுகிறார்கள்.
இப்பொழுது நடந்து வரும் ஒரு தொலைக்காட்சித் தொடரில், இந்த அம்மாவின் பாச போராட்டத்தை அழகாக சித்தரித்துக் காட்டுகிறார்கள். இது நடுத் தர வர்க்கத்தில் நடக்கும் ஒரு போராட்டம்.
வயதான அம்மா. குடிகார மகன். என்ன சொன்னாலும் கேட்காமல் குடித்து குடித்து சீரழியும் மகனிடம்,என்றாவது ஒரு நாள் திருந்த மாட்டானா, என்ற ஏக்கத்தோடு, ஒதுக்கி விடாமல் அவனுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேயும் ஒரு தாய். இது அடி தட்டின் அவல நிலை.
என்னதான் வீட்டில் எடுபிடிக்கு ஆயிரம் ஆட்கள் இருந்தாலும்,மொத்த பொறுப்பையும் தன் தலையில் தாங்கி, சீராக குடும்பத்தை நடத்த வேண்டும்,பெருமையையும், பாரம்பர்யத்தையும் காக்க வேண்டும் என்ற ஆதங்கம் கொண்டு , அல்லல்படும் சீமாட்டி களும் உண்டு. இது மேல் தட்டு வர்கத்தின் கெளரவ பிரச்சனை.
ஆட்சியோ,ஆனந்தமோ,அல்லது அதுவே விதி என்று நினைத்து அடுப்பங்கரையே கதி என்று கடைசி வரை காலத்தை ஓட்டும் பெண்களும் உண்டு.
பெண்கள் என்றும் தனித்து வாழ பழகிய தில்லை. சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.தந்தை,கணவன், கடைசி காலத்துக்கு மகன் என எப்பொழுதும் யாரையோ சார்ந்தே வாழ்கிறார்கள். வைராக்கியம் என்றும், வானப்பிரஸ்தம் என்றும் ஆண்களைப்போல் மார்தட்டி பேசமுடியாது..
என்னதான் ஆண், பெண் சமம் என்று கோஷமிட்டாலூம் உடலாலும் ,உள்ளத்தாலும் பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். எல்லையை தாண்டி பொறுமையை கை யாளும் திறன் உள்ளவர்கள்.
வயதான மூதாட்டி ஒருவர் வீட்டில் வாழ்கிறார் என்றால், அந்த வீடு பல் வேறு நிலைகளில் பண்பட்டு இருக்கும்.
அவரின் கடந்த கால நல் அனுபவங்கள் அக் குடும்பத்திற்கு கடினமான காலங்களில் கை கொடுக்கும்.
ஒரு தம்பதியர்.இருவரும் அறுபது வயது வரை ஓடி ஓடி உழைத்து இன்று ரிடைடர்ட் ஆகி வீட்டில் தனித்து வாழ்கிறார்கள். பெற்ற பிள்ளைகள் வெளி நாட்டில் வாசம்.
இந்த முதுமையில் கணவருக்கோ உடலில் ஊர்பட்ட உபாதைகள்.
கணவனுக்கு வேளா வேளைக்கு மருந்து மாத்திரையென தந்து,ஒரு குழந்தை போல் கவனித்துக் கொள்ளும் பணி.
ஒரு பெண்மணி சொன்னாள். ஏழெட்டு முறை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் போய்விட்டு வந்தேன்.
என் தலையை பார்த்ததும் சமயல் கட்டை திறந்து விட்டுட்டு ஜாலியாக பெண்ணோ ,மருமகளோ ஒதுங்கிக் கொள்வார்கள்.
திரும்பி வரும் வரை வேலை….வேலை என உழைத்து விட்டு ஊர் திரும்புவேன்.
இனிமே அங்கே போய் மாட்டிக்க மாட்டேன் என்று அலுத்துக்கொண்டார்.
அடுத்த அழைப்பு வந்தவுடன் பெட்டி படுக்கையோடு தயாரானார்.
“ஒத்தாசைக்கு கூப்பிட்ரா. நம்மை விட்டா அவாளுக்கு யார் இருக்கா”.
இது தான் பெண்களுக்கே உண்டான பாசம்.. இது போல் இன்னும் நிறைய எழுதலாம்……..எங்கே ரிடையர்மெண்ட்.




