
திருமணமாகாத 20 வயது மாணவின் 29 வார கர்ப்பத்தை பாதுகாப்பாக கலைக்க முடியுமா என்பதை கண்டறிய டாக்டர்கள் குழுவை அமைக்குமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…!
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணமாகாத 20 வயது பி.டெக் மாணவரின் மருத்துவப் பரிசோதனையின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எய்ம்ஸ் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கில் சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெஞ்சில் அவர் காஜியாபாத்தில் உள்ள விடுதியில் வசித்து வருவதாக தெரிவித்தார். ஏறத்தாழ 29 வாரங்கள் உள்ள கர்ப்பத்தை அந்த பெண் கலைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவக் குழு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவரின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பதை ஆராய்வதற்கு ஜனவரி 20 ஆம் தேதி மருத்துவக் குழுவை அமைக்க எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. எய்ம்ஸ் தரப்பிலிருந்து வரும் அறிக்கையை ஆய்வு செய்து ஜனவரி 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.