
காரில் சட்டை விரோதமாக மறைத்து வைத்து இந்திய அகதிகளை இங்கிலாந்துக்குள் அழைத்துச் சென்ற இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசிப்பவர் பல்வேந்தர் சிங் புல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டோவர் பகுதியில் காரில் சென்றுள்ளார்.அப்போது அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதன் பின்பு, பாதுகாப்பு படையினர் அவரது காரை சோதனை செய்துள்ளனர். அப்போது காருக்குள் மறைத்து வைத்து சட்ட விரோதமாக இந்திய அகதிகள் மூன்று பேரை இங்கிலாந்துக்குள் அழைத்து வந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்தனர்.
இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களிலேயே அதே டோவர் பகுதியில் மற்றொரு இந்திய வம்சாவளியான ஹர்ஜித் சிங் தலிவால் என்பவர் நான்கு இந்திய அகதிகளை காரில் மறைத்து வைத்து சட்ட விரோதமாக கடத்தி வந்துள்ளார். அப்போது அவரும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார்.
அவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது.
அவ்விசாரணையில் பல்வேந்தர் சிங் மற்றும் ஹர்ஜித் சிங் உள்ளிட்ட இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, இருவருக்கும் தலா ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.