இப்படி வாழ்ந்தால் நோயும் இருக்காது, மருந்தும் தேவைப்படாது..!! படித்ததில் பிடித்தது..!!

நெருங்கிய உறவினர்கள் எட்டு பேர் மூன்று நாள் பயணமாக, வெவ்வேறு ஊர்களில் இருக்கும் சில கோவில்களுக்குச் சென்று வரத் தீர்மானித்தனர். ஒரு வேனை ஏற்பாடு செய்து, அதில் பயணம் மேற்கொண்டனர்.

பயணம் தொடங்குவதற்கு முன், சீதாராமன், தன் சகோதரன் ரமணியிடம், “நாமெல்லாம் ஆரோக்கியமாத்தான் இருக்கோம்.

ஆனா, ராமசாமி அண்ணனும், ஜானகி அண்ணியும் வயசானவங்க. அவங்களுக்கு உடல்நலப் பிரச்னை எதுவும் வராம இருக்கணுமேன்னுதான் கவலையா இருக்கு!” என்றான்.

“அதான் மாத்திரை எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கோமே!” என்றான் ரமணி.

“வழியில சாப்பிட நிறைய ஸ்நாக்ஸ் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்திருக்கோம். அதனால, வெளியில எந்தத் தின்பண்டமும் வாங்க வேண்டாம். நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிட்டா, பிரச்னை எதுவும் இருக்காது” என்றான் விஸ்வநாதன்.

கார் கிளம்பி இரண்டு மணி நேரம் ஆவதற்குள்ளேயே, “எங்காவது டாய்லட் இருந்தா நிறுத்துங்க” என்றாள் விஸ்வநாதனின் மனைவி அகிலா.

“தண்ணி அதிகம் குடிக்காதேன்னு சொன்னேன் இல்ல?” என்றான் விஸ்வநாதன், எரிச்சலுடன்.

“உளறாதீங்க. எனக்கு வயத்தைக் கலக்குது!” என்றாள் அகிலா, விஸ்வநாதன் காதில், ரகசியமாக.

சற்றுநேரம் கழித்து, முறுக்கு, தட்டை போன்ற தின்பண்டங்களை விநியோகிக்க ஆரம்பித்தாள் ரமணியின் மனைவி மாலா.

“இப்பவே எதுக்கு ஸ்நாக்ஸை வெளியே எடுக்கற? மூணு நாளைக்கு வச்சுக்கணும்!” என்றபடியே, முறுக்கு, தட்டை ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு எடுத்துக் கொண்டான் ரமணி.

“லஞ்ச் சாப்பிட இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே! அதுவரையில பசி தாங்கணும் இல்ல?” என்ற சீதாராமன், “அந்த வாழைப்பழத்தை எடு!” என்றான், தன் மனைவி விமலாவிடம்.

பயணம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, “அப்பாடா! ஒருவழியா பயணம் முடிஞ்சுது. வீட்டுக்குப் போய் ரெண்டு நாளைக்குப் படுத்துத் தூங்கணும் போல அவ்வளவு அலுப்பா இருக்கு!” என்றான் ரமணி.

“எனக்கு வயிறு சரியாகவே ரெண்டு நாள் ஆகும் போல இருக்கு. நாளைக்கு எப்படி ஆஃபீசுக்குப் போகப் போறேன்னே தெரியல!” என்றான் விஸ்வநாதன்.

முதலில், ராமசாமியையும், அவர் மனைவி ஜானகியையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டனர்.

அவர் வீட்டிலிருந்து வேன் கிளம்பியதும், “ஒண்ணு கவனிச்சியா? நம்ம எல்லாருக்குமே வயிற்று வலி, தலை சுற்றல், இருமல் மாதிரி ஏதாவது பிரச்னை வந்தது” என்றான் விஸ்வநாதன்.

“அதுதான் எடுத்துக்கிட்டுப் போன எல்லா மாத்திரையும் தீர்ந்துடுச்சே! அது போதாம, ரெண்டு மூணு இடத்தில ஃபார்மசியில வேற வாங்கினமே!” என்றான் ரமணி.

“நான் சொல்ல வந்தது அது இல்ல. நம்ம எல்லாருக்கும் ஏதோ ஒரு உடல்நலப் பிரச்னை வந்தது. ஆனா, ராமசாமி அண்ணனுக்கும், ஜானகி அண்ணிக்கும் எந்தப் பிரச்னையும் வரலை. அவங்களுக்கு மருந்தோ மாத்திரையோ தேவைப்படலை, கவனிச்சீங்களா?” என்றான் விஸ்வநான், எல்லோரையும் பார்த்து.

“அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவங்கதான் அதிகம் வயசானவங்கங்கறதால, அவங்களுக்குத்தான் ஏதாவது உடல்நலப் பிரச்னை வருமோன்னு, கிளம்பறதுக்கு முன்னால நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தேன்!” என்றான் விஸ்வநாதன்.

“அது மட்டும் இல்ல. நம்ம எல்லாரையும் விட ராமசாமி அண்ணன்தான் ரொம்ப எனர்ஜடிக்கா இருந்தாரு.

மீதி எல்லாருக்கும் சில சமயமாவது அலுப்பும், சோர்வும் இருந்தது. ஆனா, அண்ணனுக்குக் கொஞ்சம் கூட சோர்வு வரலை. இன்னும் ரெண்டு நாளைக்குப் பயணம் இருந்தா கூட, அவர் சமாளிப்பாரு போல இருக்கு!” என்றாள் அகிலா.

“நான் ஒண்ணு கவனிச்சேன். அதை நீங்கள்ளாம் கவனிச்சீங்களான்னு தெரியல!” என்றாள் விமலா.

“என்ன அது?” என்பது போல், மற்ற அனைவரும் விமலாவைப் பார்த்தனர்.

“அவங்க ரெண்டு பேரும் மருந்து மாத்திரை எதுவும் எடுத்துக்கலைன்னு சொன்னீங்களே! அவங்க ஸ்நாக்ஸ் கூட எடுத்துக்கலைங்கறதை கவனிச்சீங்களா?

ஒரு தடவை, கொஞ்சமாவது எடுத்துக்கங்கன்னு அவர்கிட்ட சொன்னேன். அவர் ‘பசிக்கலையேம்மா!’ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு,

நான் சொன்னதுக்காகக் கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டாரு. அண்ணியும் அப்படித்தான். அது மட்டும் இல்லை. நேத்து அவரு லஞ்ச் சாப்பிடலை. கவனிச்சீங்களா?” என்றாள் விமலா.

“ஆமாம். வயிறு சரியில்லை போல இருக்குன்னு நான் நினைச்சேன்” என்றாள் மாலா.

“அது இல்ல. அதுக்குக் காரணம் வேற. நேத்திக்கு நாம கொஞ்சம் முன்னாலேயே லஞ்ச் சாப்பிட்டுட்டோம்.

ஏன் லஞ்ச் சாப்பிடலைன்னு நான் அவர்கிட்ட கேட்டப்ப, ‘காலையில சாப்பிட்ட டிஃபனே இன்னும் செரிக்கலியே, அம்மா! அதுக்குள்ள எப்படி சாப்பாடு சாப்பிடறது?’ன்னு சொன்னாரு. அண்ணி மட்டும் கொஞ்சமா சாப்பிட்டாங்க.”

“இப்ப புரியுது, அண்ணனுக்கும், அண்ணிக்கும் ஏன் மருந்து மாத்திரை எல்லாம் தேவைப்படலேன்னு!” என்றான் சீதாராமன்.

நீதி :

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

Read Previous

வாழ்க்கையில் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது..!!

Read Next

கோதுமை புல் ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular