
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாக்கு உட்பட்ட பகுதி மீனாட்சி பட்டி கிராமம். இந்த மீனாட்சி பட்டி கிராமம் என்பது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் அமைந்து உள்ளது. மீனாட்சி பட்டி ஊரில் வரவேற்பு பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரின் திருவுருவ படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 12 :52 மணி அளவில் சுமார் 4 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்9 பேர் படத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தி உள்ளனர்.
இதனை அடுத்து இன்று காலை அப்பகுதி மக்கள் புகைப்படத்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஶ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி சாலையில் இந்தப் போராட்டமானது நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தற்போது இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளனர். இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.
மேலும் அருகில் உள்ள ஒரு கிராமத்தின் மற்ற சமுதாயத்தினர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சி பட்டி ஊர் தலைவர் புகார் அளித்து உள்ளார். அந்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்து உள்ளனர். மீனாட்சி பட்டியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.