
நான் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். இப்ப பத்து வயசுல எனக்கு ஒரு பையன் இருக்கான். என் வாழ்க்கைய சீரழிச்சுட்டாங்க, ஏமாத்திட்டாங்கன்னு யார் மேலயும் குத்தம் சொல்ல எனக்கு பிடிக்கல. எனக்கு கல்யாணம் ஆகும் போது 17 வயசு தான் இருக்கும். பத்தாவது படிச்சுட்டு ரெண்டு வருஷம் வீட்டுல சும்மா தான் இருந்தேன்.
சும்மா இருந்தேன்னா படிக்க விருப்பம் இல்லாம இல்ல. எங்க வீட்டுல என்ன பத்தாவது வரைக்கும் படிக்க வெச்சதே ரொம்ப அதிகம் தான். ரெண்டு வருஷமா மாப்பிளை பார்த்துட்டு இருந்தாங்க. ரெண்டு வருஷம் கழிச்சு தான் மாப்பிளை கிடைச்சார்.
எங்க வீட்டு சூழலுக்கும், நான் படிச்ச படிப்புக்கும் எனக்கு அரசு உத்தியோகம் பாக்குறவரோ, சொந்த தொழில் செய்யிறவரோ கிடைப்பார்ன்னு நான் கனவுலயும் நெனச்சது கிடையாது.
கண்டிப்பா ஒரு கூலி இல்ல, மார்கெட்டுல வேலை பார்க்குற ஆள் தான் கிடைப்பார்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் நெனைச்சு மாதிரியே ஒரு லாரி டிரைவர் எனக்கு கணவரா கிடைச்சார்.
என் பொருளாதார வசதிக்கு என் வாழ்க்கை எப்படி அமையும், என் கல்யாணம் எப்படி நடக்கும், என்னோட அடுத்த நாள் எப்படி விடியும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, என்னோட பிள்ளைங்க இதே வாழ்க்கைய வாழக் கூடாதுன்னு மட்டும் எனக்குள்ள ஒரு வைராக்கியம் இருந்துச்சு. ஆனா, அந்த வைராக்கியத்துக்கும் ஒரு முட்டுக்கட்டை விழுந்துச்சு.
கல்யாணம் ரெண்டே மாசத்துல என் வயுத்துல கரு உண்டாச்சு. எங்க வீட்டுல, என் கணவர் வீட்டுல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். ஆனா, என் கணவர் உடல்நிலை மட்டும் நாளுக்கு, நாள் மோசம் ஆகிட்டேப் போச்சு.
மனுஷன் மெலிஞ்சுட்டே போனாரு. ஒரு தடவ லோடு ஏத்திட்டு போன மனுஷன் வீடு திரும்பல. ஒருசில நாள் கழிச்சு அவரு ஓட்டீட்டு போன லாரி மட்டும் தான் கிடைச்சது. எனக்கு எதுவுமே விளங்கல.
குழந்தை உண்டாகி அஞ்சு மாசம் இருக்கும். என்னோட உடம்புலயும் நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது. டாக்டர் செக்கப் பண்ணிப் பார்த்தப்ப தான் எனக்கு எச்.ஐ.வி பாஸிடிவ்ன்னு தெரிஞ்சுது. அப்போதான் அந்த மனுஷன் எனக்கு குழந்தை மட்டும் கொடுக்கல, இதையும் சேர்த்துக் கொடுத்துட்டு போயிருக்கார்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
இது என்னோட குழந்தைக்கும் பரவிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால, உடனே கருவ கலைச்சிடலாம்ன்னு டாக்டர் அம்மாக்கிட்ட கேட்டேன். ஆறாவது மாசத்துல கருக்கலைப்பு செய்யிறது என்னோட உயிருக்கு ஆபத்து. அதுமட்டுமில்லாம, குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமா பார்த்துக்க முடியும்ன்னு ஆறுதல் சொன்னாங்க.
என் கணவர் காணாம போனதால, நான் தான் தப்பு பண்ணவ, இது தெரிஞ்சு தான் அவன் ஊரைவிட்டு ஓடிட்டான்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. அக்கம்பக்கத்துக் காரங்க, சொந்தக் காரங்க எல்லாரும் என் மேல தான் சந்தேகப்பட்டாங்க. என்னால இத தாங்கிக்க முடியல.
என்ன பண்றதுன்னு தெரியல. என் ஒண்ணுவிட்ட சித்தப்பா என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. அவர் கல்யாணம் பண்ணிக்கல. ஒரு ஆன்மீகவாதி. என்னதான் அவரோட மகள் மாதிரி பார்த்துக்கிட்டார். அதனால, அவரு எனக்கு ஆதரவா இருப்பார்ன்னு அவர பார்க்க போனேன். அவரு அப்போ கோயம்புத்தூர்ல இருந்தார்.
எனக்கு கோயம்புத்தூர்ல தான் குழந்தை பிறந்துச்சு. அவரு தான் என்ன பார்த்துக்கிட்டார். அவருக்கிட்ட நடந்த உண்மை எல்லாம் சொன்னேன். ஒன்னும் பயப்படாதம்மா நான் இருக்கேன்லன்னு தைரியம் சொன்னாரு.
குழந்தை பிறந்துச்சு. அவரே ஒருத்தர் கிட்ட குமாஸ்தாவா தான் வேலை பார்த்துட்டு இருந்தார். அவருக்கு நானும், என் குழந்தையும் சுமையா இருக்கக் கூடாதுன்னு மனசுல பட்டுச்சு. ஏதாவது வேலை வாங்கி தர முடியுமான்னு கேட்டேன்.
பத்தாவது மட்டும் படிச்சு பெருசா எந்த வேலைக்கும் போக முடியாது. அப்படியே போனாலும், நீ நினைக்கிற மாதிரி உன்னோட பிள்ளையா வளர்க்க முடியாதுன்னு சொன்னாரு. என்ன ஒரு கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்த்துவிட்டார்.
அது முடிச்சு சரியான வேலை கிடைக்கல. பின்ன சொந்தமா ஏதாவது முயற்சிக்கலாம்ன்னு ஒரு தையல் பயிற்சி மையத்துல சேர்த்துவிட்டார். ஒருவழியா ரெண்டு வேலை கத்துக்கிட்டேன். ஆனா, வேலை தான் கிடைக்கல.
நானே வீட்டுல இருந்துட்டு தையல் வேலை பண்ண ஆரம்பிச்சேன். அப்பதான்., என் சித்தப்பா வேலை செய்யிற முதலாளியோட மனைவி துணி தைக்க என்ன பார்க்க வந்தாங்க. அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு. கொஞ்ச காலத்துலேயே எனக்கூட நெருங்கி பழக ஆரம்பிச்சாங்க. நான் ஒரு எச்.ஐ.வி நோயாளின்னு தெரிஞ்சும்.
பிறகு தான், அவங்களுக்கு சொந்தமா இருந்த ஒரு மண்டபத்துல எனக்கு சூப்பர்வைசர் வேலை போட்டுக் கொடுத்தாங்க. கிட்டத்தட்ட அங்க ஆல் இன் ஆல். ஆர்டர் கேட்டு வரவங்க கிட்ட பேசுறது. அவங்களுக்கு வேண்டிய உதவி எல்லாம் செஞ்சு கொடுக்குறதுன்னு எல்லாமும் செஞ்சேன்.
அவங்களுக்கு என்மேல ரொம்ப நம்பிக்கை. அந்த மண்டபத்துக்கு வெளிய இருந்த சின்ன இடத்துல எனக்குன்னு ஒரு வீடு கட்டிக் கொடுத்தாங்க. அங்க தான் இப்ப நான், என் மகன், என் சித்தப்பா வாழ்ந்துட்டு வரோம்.
இதோட நிறுத்திக்க எனக்கு மனசு வரல. இன்னும் ஏதாவது முயற்சி செய்யணும். என் மகனுக்கு அவன் ஆசைப்படுற எல்லாமும் ஏற்படுத்திக் கொடுக்கணும்ன்னு ஒரு வெறி எனக்குள்ள இருந்துச்சு.
கல்யாண மண்டபத்துல டெகரேஷன் வேலைக்கு ஒரு தம்பி வருவான். அவன் ரொம்ப திறமை சாலி. ஆனா, தினக்கூலியா தான் வேலை செஞ்சுட்டு இருந்தான். குப்பையா இருந்தா கூட அத வெச்சு அலங்காரம் பண்ணிடுவான். அப்பத்தான் ஒரு யோசனை வந்துச்சு. ஏன் அவன வெச்சு ஒரு டெகரேஷன் தொழில் ஆரம்பிக்கக் கூடாதுன்னு.
உடனே முதலாளி அம்மாக்கிட்ட இதப்பத்தி பேசுனேன். சேமிச்சு வெச்ச காசு கொஞ்சம் இருந்துச்சு. முதலாளி அம்மாவும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவுனாங்க.
அந்த தம்பிய கூப்பிட்டு சொந்தமா வேலை செய்ய தயாரா இருக்கியான்னு கேட்டேன். முழிச்சான். மொத்தத்தையும் சொன்னேன். உடனே சரின்னு தலையாட்டுனான். இப்ப எங்க முதலாளி அம்மாவோட கல்யாண மண்டபத்துல நடக்குற நிறையா கல்யாணத்துக்கு நாங்களே தான் அலங்கார வேலைகளும் செய்யிறோம்.
இன்றைய தினத்தில், என் வாழ்க்கை ஆஹா, ஓஹோன்னு இல்லாட்டியும். நான் இப்ப இருக்குற நிலை தான் என் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை..