கோவிலில் இறைவனை தரிசனம் செய்தபிறகு பிரசாதமாக விபூதி கொடுக்கப்படுகிறது. விபூதி கொடுத்து இப்படி ஆசீர்வாதம் செய்வது காலங்காலமாய் நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு வழக்கம்.
கோவில்களில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விபூதியை அணிந்து கொள்பவர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாக இருந்து பிரச்சனைகளைப் போக்கி செல்வத்தை தருவதாக நம்பப்படுகிறது.
விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள் உண்டு. விபூதியை நாம் தரித்துக்கொள்ளும் பொழுது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோ அணிந்துகொள்ள வேண்டும். வலது கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் விபூதியை பவ்யமாக எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்து கொள்ள வேண்டும்.
காலையிலும், மாலையிலும், கோயிலுக்கு செல்லும் பொழுதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி போட்டுக் கொள்ளலாம். விபூதி பூசும்பொழுது வெள்ளை நிற விபூதி மட்டுமே பயன்படுத்த வேண்டும். விபூதி பயன்படுத்தும் பொழுது நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ பயன்படுத்தக் கூடாது. ஆசாரியார், சிவனடியார்களிடமிருந்து விபூதி வாங்கும்பொழுது அவர்களை வணங்கி வாங்கவேண்டும்.
வாயைத் திறந்து கொண்டும், பேசிக் கொண்டும் திருநீறு பூசக்கூடாது. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து இறையருளை புகுத்தும் தன்மை விபூதிக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
விபூதியை உச்சியில் தரிப்பதன் மூலமாக கண்டத்துக்கு மேல் செய்த பாவம் நீங்கும் என சொல்லப்படுகிறது. விபூதியை நெற்றியில் தரிக்கும் பொழுது நான்முகனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துக்களின் தோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது. விபூதியை மார்பில் தரிக்கும் பொழுது மனதினால் செய்த குற்றம் விலகும் என சொல்லப்படுகிறது. விபூதியை நாபியில் தரித்தால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது.