உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி..!! சத்தான வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?..

வெந்தயக் கஞ்சி அல்லது தேங்காய்ப்பால் கஞ்சி என்பது சத்தான காலை உணவாகும். உடலின் சூட்டை தணிக்க கூடியது இந்த வெந்தய கஞ்சி. மேலும் வாய் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த வெந்தயக்கஞ்சி விளங்குகிறது. பெரும்பாலும் வயிற்றில் புண் ஏற்படும் பொழுது தான் அதன் வெளிப்பாடாக வாயிலும் புண்ணை தோற்றுவிக்கும் இந்த வெந்தயம் வயிற்றில் உள்ள புண்ணை உடனடியாக சரி செய்யக் கூடியது.

இதை வாரம் ஒரு முறையாவது காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. கர்ப்பிணிப் பெண்களும் தாராளமாக இதை கர்ப்ப காலத்தில் காலை உணவாக சேர்த்துக் கொள்ளலாம். நன்கு குழைந்த இந்த கஞ்சியை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

வெந்தயக்கஞ்சி தயாரிக்கும் முறை:

ஒரு கப் பச்சரிசியுடன் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும்.

இதனுடன் தோல் நீக்கிய 10 பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.

பிரஷர் குக்கரில் ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிரஷர் குக்கரை மூடி விடவும்.

குக்கரில் 4 முதல் 5 விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு கப் வரும் அளவிற்கு தேங்காய் பால் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிரஷர் குக்கரில் விசில் வந்து அடங்கிய பின்பு வேக வைத்த அரிசியை கரண்டியின் பின்புறம் கொண்டு நன்கு மசித்து கொள்ள வேண்டும்.

வெந்தயக் கஞ்சி நன்கு குழைந்து இருக்க வேண்டும். இப்பொழுது இதனுடன் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

வெந்தயக் கஞ்சி ஆற ஆற கெட்டித்தன்மை வந்துவிடும் எனவே உங்களுக்கு தேவையான அளவுக்கு தேங்காய் பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காயை பாலாக சேர்க்காமல் துருவியும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் இனிப்பு சேர்த்தும் அல்லது தேங்காய் துவையல், ஊறுகாய் வைத்தும் விருப்பமான சுவைக்கேற்ப பரிமாறலாம்.

இதனை ஒருமுறை அல்லது மாதம் இரண்டு முறை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். அல்சர் நோய் உள்ளவர்கள் அடிக்கடி வெந்தயக்கஞ்சியை எடுத்துக் கொள்ளலாம்.

Read Previous

நரம்புத் தளர்ச்சி நீங்க இந்த பழத்தை சாப்பிடுங்கள்..!!

Read Next

IND vs BAN 1st Test: 3ம் நாள் முடிவில் பங்களாதேஷ் 357 ரன்கள் பின்னிலை..!! வெற்றியை நோக்கி இந்தியா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular