
உலக கோப்பை 2023 தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் வீரரான வாஷிம் ஜாபர் கூறியிருக்கிறார்.
உலகக்கோப்பை ஒரு நாள் தொடர் வரும் அக்டோபர் 5 ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் இடம் பெறாத வீரர்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாஷிம் ஜாபர் நம்பிக்கை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் “கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தனது அணியை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். மேலும் அவர் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறைகளில் கை கொடுப்பார் என்று நம்புகின்றேன்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது யுவராஜ் சிங் ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு துருப்பாக விளங்கினார். அதுபோன்ற ஹர்திக் பாண்டியாவும் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதுடன் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு துறைகளில் கை கொடுப்பார் என்று நம்புகின்றேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.