நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்கங்களில் மிக முக்கியமானதும் தவறாமல் அவர்கள் செய்து வந்ததுதான் எண்ணெய் குளியல். இது நம் உடலுக்கு பலவித நன்மைகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக உடல் சூட்டை தணிக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு எண்ணெய் குளியல் என்றால் செட்டாகாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விடுகின்றனர். ஆனால் எண்ணெய் குளியல் எடுக்கும் பொழுது நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது யார் எந்த நாளில் எப்படி எண்ணெய் குளியல் எடுக்கலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
நம் முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு பல சிறப்பான வாழ்க்கை முறை பழக்கங்களை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அந்த பழக்கங்களில் எண்ணெய் குளியலுக்கு மிகவும் முக்கிய பங்கு இருக்கிறது. எண்ணெய் குளியல் வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் நம் உடம்பில் உள்ள வெப்பநிலையை அது சீராக வைத்துக் கொள்ளும்.
எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ளும் போது சிரங்கு புண் போன்ற சருமம் தொடர்பான நோய்கள் நம்மை அண்டாது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் நாற்றம் விலகும். சருமத்தில் உள்ள ஈரத்தன்மையை பராமரித்து முகமும் உடலும் பொலிவு பெற செய்வதுடன் இளமையும் தக்க வைக்கிறது இந்த எண்ணெய் குளியல். வாய் காது கண் செவி மெய் என ஐம்புலன்களின் செயல்பாட்டை எண்ணெய் குளியல் அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், உடலில் சேரும் பித்தத்தை சரி செய்கிறது எண்ணெய் குளியல். செக்கிலாட்டப்பட்ட சுத்தமான நல்லெண்ணையை வாங்கி வந்து நம் உடல் முழுவதும் தேய்த்து நன்றாக நீவி விட்டு குளிப்பதன் மூலம் நம் உடலுக்கு மசாஜ் செய்வது போல உடல் ரிலாக்ஸாக ஆவதை நம்மால் உணர முடியும். உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் பாதம் வரை எல்லா இடத்திலும் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற விட்டு தான் குளிக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்து குளிக்க சாஸ்திரப்படி உகந்த நாட்களாக கூறப்படுவது ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிக பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் நீங்கள் எண்ணெய் தேய்த்து ஒருமுறை குளித்து பார்த்தால் உங்கள் உடலில் நிகழும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.




