
எத்தனை எளிதாய் என்னை கடந்து செல்கிறாய் நீ. மழை விட்டதும் மறந்து வைத்துப் போகும் ஒரு குடையைப் போல. ஆனாலும் நான் அங்கேயே நிற்கின்றேன் ஈரம் சொட்டச் சொட்ட.
கைகளோடு ரேகையைப் போல பின்னிப் பிணைந்திருக்க விரும்பிய உறவொன்றினை கைக்குட்டையை விடவும் வேகமாய் வீசியெறிய எப்படி உன்னால் முடிகிறது ?
உன் மறந்து போன ஞாபகமாய் நான் அதற்குள் ஆகிப் போனேனா ? ஆனாலும் எனது ஞாபகங்கள் முழுக்க நீயே இருக்கிறாய். சர்க்கரைக்காய்
பிழியப்பட்ட கரும்பைப் போல மனம்
நொந்து கிடக்கிறது. இனியும் அதில் துளியும் ஈரமில்லை.
உனக்குத் தெரியுமா ? என் பேருந்து உன் ஊரினைக் கடக்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது. ஒரு கண்ணை மூடிக் கொள்கிறேன். உன்னைக் கண்டு விடக் கூடாதென. மறு கண்ணையோ அகலத் திறக்கிறேன். எப்படியாவது உன்னைக் கண்டு விட மாட்டேனா என.
எத்தனை பாடல்களைத்தான் நானும் வெறுப்பது ? அத்தனையிலும் உன் குரல் கேட்பதால் உன் நினைவுகளும் மீண்டுமாய் வந்து என்னை வதம் செய்கிறது. இதிலே நாம் சேர்ந்து பாடிய பாடல்கள் வேறு!
வர்ணம் தீட்டும் முன்பே சொல்லி இருக்கலாமே நீ நிஜமல்ல நிழல் என்று.
சரி. செல்வதென்று முடிவெடுத்தாய். அதிலொன்றும் தவறில்லை. போகும்போது உன் நினைவுகளையும் மொத்தமாய் எடுத்துச் சென்றிருந்தால் உன்னைப்போலவே நானும் இரவுகளில் கொஞ்சம் தூங்கி இருப்பேனே…