
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை பற்றி விமர்சித்ததாக கூறி அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணா பற்றி பேசினால் நாக்கை அறுப்பேன் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார், இதனை தொடர்ந்து சி.வி சண்முகம் உள்ளிட்ட பலரும் அவருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் இது அதிமுக பாஜகவிற்கு இடையில் மோதலாக மாறி உள்ளது.
இந்நிலையில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவருடைய உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவரிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “நேற்று வரை ஒரு வேலையில் இருந்து விட்டு இன்று திடீரென அரசியலுக்கு வந்து அதை ஒரு விளையாட்டாக நினைத்துக் கொண்டு சிலர் இருக்கின்றார்கள்.
அரசியல் அனுபவம் கற்றுக் கொள்வது வேறு, மக்கள் பிரச்சினைகளை மனதில் கொண்டு அதை எப்படி சரி செய்யலாம் என்று நினைத்து செயல்பட வேண்டும். அரசியலுக்கு வந்து விட்டோம் என்பதற்காக வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவதும் செயல்படுவதும் கூடாது”, என்று தெரிவித்துள்ளார்.