ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்… வாழை இலை நாகரிகம் தெரியுமா..?
இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.
ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.
அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது.
அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம்.
அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.
எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.
வாழை இலை… நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!
என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல’?
பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்’மயம்!
தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்..
சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?
சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.
அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.
இலையோட மேல் பக்கம், `தொடு கறி’ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது?
குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு!
இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்… வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.
பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம்.
வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்’ தான்ங்க அது!
நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்….