அசைவ பிரியர்களுக்கு கடல் உணவின் மீது அதிக விருப்பம் தான். அதிலும் மீனுக்கு இணையாக இறால் உணவுகள் மீது விருப்பம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இறால் உணவு சமைப்பதற்கு எளிமையானதாக மட்டுமல்லாமல் சுவையிலும் அட்டகாசமாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியாக இறால் தொக்கு செய்யாமல் இந்த முறையில் இறால் வறுவல் செய்து புது சுவையில் கொண்டாடலாம் வாங்க…
இதற்கு முதலில் அரை கிலோ நல்ல பெரிய இறால்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அளவில் சிறிய இறால்களை விட சற்று பெரிய இறால்களை பயன்படுத்தி தொக்கு செய்யும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.
அப்படி நன்கு கழுவி சுத்தம் செய்த அரை கிலோ இறாலை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர், பாதி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு பிசைந்து மசாலாக்களில் ஊறும்படி ஒரு ஓரமாக வைத்துவிட வேண்டும்.
அடுத்ததாக தொக்கிற்கு தேவையான மசாலாக்களை வறுத்து தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஆறு முதல் 8 வெள்ளை பூண்டு, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், பெரிய நெல்லிக்காய் அளவு புளி, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த ஆறு முந்திரி சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் மசாலா தடவி ஊற வைத்திருக்கும் இறாலை நெய்யோடு சேர்த்து இரண்டு நிமிடம் பொறித்து எடுக்க வேண்டும்.
பிறகு மீதம் இருக்கும் அதை நெய்யில் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்தவுடன் நாம் வறுத்து அரைத்தும் வைத்திருக்கும் மசாலாவை சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலாவை நெய்யோடு சேர்த்து நன்கு வதக்கிய பிறகு லேசாக தண்ணீர் தெளித்து பச்சை வாசனை செல்லும் வரை கொதிக்க விட வேண்டும். மசாலாக்கள் நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் பொரித்து வைத்திருக்கும் இறாலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இறால் சேர்க்க இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடலாம்.
இப்பொழுது சுவையான காரசாரமான இறால் வருவல் தயார்.