
இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு வந்த திமுக எம்எல்ஏவை தண்ணீர் வழங்கவில்லை என்று கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு காரில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் தலைமையில் திமுக அரசின் இரு ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது அங்கு வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்று கூறி திமுக எம்எல்ஏ உதயசூரியனை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் இருந்து செல்ல முயன்ற திமுக எம்எல்ஏ உதயசூரியனை அவருடைய காரில் ஏறவிடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் திமுக எம்எல்ஏவை மீட்டனர்.அப்பகுதியில் இருந்து எம்எல்ஏவை அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் கல்வராயன் மலைப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.