
தாலி கட்டிய அன்றோ அல்லது மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடைக்கலைப்பு என சுகமாக அரங்கேறும் பல நிகழ்வுகள்…உனக்கு எப்படியோ தெரியவில்லை எனக்கு மிகுந்த வலி இருப்பினும் சுகமாக நான் அனுபவித்தேன்… அன்றிலிருந்து நிகழும் நிகழ்வுகளை நான் அடுக்குகின்றேன் பாருங்கள்…
அதிகாலை எழுந்து குளித்துச் சமைத்து முத்தத்தோடு உனக்கு
உணவைக் கொடுத்து அனுப்பிய பின்பு துணி துவைத்து, வீடு சுத்தம் செய்து, ஆடைகள் சமன் செய்து அழகாக மடித்து வைத்து உன் அம்மாவுக்கு இல்லை மன்னிக்கவும் நம் அம்மாவுக்கு பணிவிடை செய்து மகனையும் மகளையும் பாடசாலை அனுப்பி வைத்து மறுபடியும் சமைத்து நமது பிள்ளைகளை பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக் கொண்டே இருக்கிறேன் நான்…இன்னும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்… முதல் முறை கூடலின் போது ஒரு வலி உணர்ந்தேனே அதை விடவும் ரணம் என்றார்கள் மகப்பேறு பயந்து நடுங்கி நகர்ந்துக் கொண்டிருந்தேன் பெருமையோடு நம் பிள்ளையை வயிற்றில் சுமந்து பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால் வயிற்றை அறுத்து தான் எடுக்க வேண்டும் என்று…இப்பொழுது சொல்கிறேன் கேளுங்கள்…
எங்கள் ஆடை சற்று விலகியவுடன் எட்டி எட்டிப் பார்ப்பீர்களே மறைவான பகுதி தெரிகிறதா என்று முழுதாக உரித்து சுவையாக சுவைத்து சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக தெரிந்தவளை இப்போது பாருங்கள்… வெட்டுப்பட்டு மாமிச குவியலாக இருக்கிறாள்….நன்றாகப் பாருங்கள்…
விழிகளை விழித்துப் பாருங்கள்…
நீங்கள் அடையத் துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே இதை நன்றாகப் பாருங்கள்…என்னை வெட்டியேனும் என் குழந்தையைப் பத்திரமாக வெளியில் எடுங்கள் என்று ஒரு பெண் சொல்கிறாளே உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா ?
இச்சைக் கொண்டு நோக்கும் ஆண்கள் இதை நன்றாகப் பார்த்து
பிறகு ஒரு பெண்ணை நோக்குங்கள் கண்டிப்பாக காமம் கலக்காது உங்கள் கண்களில் தாய்மையின் மகத்துவம் மட்டுமே தென்படும் என்பேன் நான்…கூடலின் வலி, மகப்பேறின் வலி வயிற்றை வெட்டித் தைத்ததன் வலி
இவையெல்லாம் மறந்து போகும்
இந்த அழகான மழலையின் முகம் பார்க்கையில்…ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அதிசயம் தான்…
பெண்மை(தாய்மை)யைப் போற்றுவோம் √