கோயம்புத்தூரில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருள்களின் பயன்பாடும், போதை பொருள் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சி அலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது. அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் அவ்வப்போது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த தேனி மாவட்டத்தை சார்ந்த செல்வம் மற்றும் இளையராஜா ஆகியோரை கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராந்திகுமார் உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 37 பேர் மீது குண்டம் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.