
கடவுள் என்ற சொல்லுக்கு உள்ளத்தை கடந்து செல்லுதல் என்பதன் பொருளாகும். உள்ளத்தைக் கடந்த நிலையில் ஆத்மாவே கடவுள் என்பதை உணர்வதே கடவுள் நிலை.. ஆத்மாவே கடவுள் என்பதை உணராமல், மனிதர்களாகிய நாம் இறைவனை தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து இறுதியில் ஒரு பயனுமே இல்லாமல் இறப்பது அறியாமை என்று சிவவாக்கியர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
ஓடி, ஓடி, ஓடி, ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி, நாடி, நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி ,வாடி, வாடி ,வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி ,கோடி ,கோடி, கோடி எண் இறந்த கோடியே..
தானே பரம்பொருள் என்கிற உணர்வை புத்தியின் மூலமாக அடைந்தால் மட்டும் போதாது. உணர்ச்சியின் ரூபத்தில் அது ரத்தத்துடன் கலந்துஊடுருவி பாய்ந்து நாடிகளின் வழியாக ஓடி தன் சொரூபத்துடன் கலந்து உள்ளே செலுத்தப்படுவது ஞானம்.
போர்வை போன்ற உடலை பார்க்காமல் , உடலில் உள்ள குண்டலினி சக்தி ரூபத்தில் விளங்கும் ஆத்மாவை தரிசிக்க வேண்டும்.. பல் வகையான மணிகள் ஒரே நூலில் கோக்கப்பட்டு இருப்பது போல சர்வ சக்தியும் நம்மிடத்தில் உள்ளது என்கிற தெளிவான நிலையை உணர வேண்டும்.




