
Oplus_131072
அந்த ஊருல ஒரேகறிக்கடைதான். அது சுல்த்தான் பாயோடது. வாரத்துல மூனுநாளு தான் கடையே. ஞாயிறு புதன் சனி அப்புறம் விசேசநாளுகள்ல கடை. தீவாளிக்கெல்லாம் தனியா கெடா திருமங்கலம் ஆட்டுச் சந்தையில போயி புடிச்சாருவாரு . தனிக்கறி எலும்புக்கறி தனித்தனியாக்கெடைக்கும் வேற வேற ரேட்டு. ஆனா கலப்படமில்லாம வெள்ளாட்டங்கறி கிடாக்குட்டியா எளசா சுத்தமா இருக்கும். தல கால் எல்லாம் வாட்டி வெட்டிக்குடுப்பாரு. அதுபோக மண்ணீரல் சொவொரொட்டின்னா சொல்லிவைச்சி வாங்கனும் இல்லாட்டிக் கெடைக்காது . சொவொரொட்டி ரத்தசோகை இருக்குற வங்களுக்கும் தீட்டு நிக்காமப் போறவு களுக்கும் வாங்கிக் கொடுப் பாங்க.
செலகடைகள்ல பொட்ட ஆட்ட இல்லாட்டினா செம்புறிய கெழுட்டு ஆட்ட கலந்து விப்பாங்க. இன்னும் செலபேர் எதை எதையோ கலந்து விப்பாங்க ஆனா நம்ம பாய்கிட்ட சரக்கு சுத்தம்.
இவருகடையில வாங்குறதுக்குன்னே நம்பி பக்கத்து ஊருல இருந்தெல்லாம் வருவாக
தொழில்ல அவ்வளவு நேர்மை. இந்தவருசம் தீவாளிக்கி எப்புடியும் பத்துக்கெடா ஓடுமாட்டம் தெரிஞ்சது .இதுமாதிரி நேரங்கள்ல திருமங்கலத் துக்குப்பக்கத்துல செங்கப்படைங்குற ஊருல போயி கெடாக்களைப் பாத்து இதுக்குன்னே வளக்குறவுக கிட்ட அட்வான்ஸ் குடுத்துட்டு வந்துருவாரு
அப்புறம் தீவாளிக்கி மொதநாளு போயிவண்டில மொத்தமா ஏத்திட்டு வந்துருவாரு அந்த ஊருலதான் ஆடுவளக்குறதத் தொழிலா வைச்சிருந்தாக வீட்டுக்குவீடு ஆடு வளப்பாக அந்தப்பக்கமெல்லாம் கரடு அதிகமா இருந்துச்சு அது ஆடுமேய்க்க வசதியா இருந்துச்சு வீட்டுக்கு வீடு அதுக்கு தொட்டியெல்லாம் இருக்கும் அங்க ஆடுமேய்க்கிறதே தொழிலா ப் பண்ணிட்டு இருந்தாங்க நேரடியா வாங்குறதுனால வெளையும் கம்மி,
அந்த ஊருல சீனிச்சாமிவீட்டுக்குத்தான் அன்னிக்கி சுல்த்தான் பாய் போயிருந்தாரு. நல்ல எளங்குட்டிகளா நாலஞ்சி இருந்துச்சு வளந்த கெடாக்களும் நின்னுச்சு நல்லதாப் பாத்து அட்வான்ஸ் குடுக்கும்போது அவரு மகன் வெளையாடப்போனவன் திரும்பிவந்தான். அப்ப சீனிச்சாமி “ காப்பித்தண்ணி குடிக்கிறீங்களா பாய்” நு கேட்டாரு. பாய் சரின்னு சொன்னாரு
அவர் மகன் இவரப் பாத்த வன்ன அடையாளம் தெரிஞ்சிக்கிட்டான்
”ஆடுபுடிக்கவா வந்தீக?”ன்னான்
“ஆமா”ன்னாரு.
“எல்லா ஆட்டையும் வாங்கிடீங்களா”ன்னான் . ”ஆமா”ன்னாரு
”அந்த கருப்புக்குட்டியுமா”ன்னான் ”ஆமா”ன்னாரு.
“அத மட்டும் விட்டுருங்களேன்னான். ஏன்னா
என்னோட பிரண்டு அது, தெனம் நாந்தான் அத மேச்சலுக்குக்கூட்டிட்டுபோவேன் ,பேருகூட வைச்சிருக்கேன் கருப்புன்னு போனதடவ அதோட அம்மாவப் புடிச்சிட்டுப்போயிட்டீக..பாவம் அதுக்குநாந்தேன் பாட்டில்ல பாலுகுடுத்து வளத்தேன். அதுகூடத்தான் நான் வெளையாடு வேன்”னு சொல்லிட்டு இருக்கும்போதே அது அவன வந்து உரசிச்சி .
அவன் அதைத்தூக்கி முத்தம் குடுத்தான்
அப்ப சீனிச்சாமி அவர் மகன்கிட்ட தூக்குப்போனியக்குடுத்து போய் காப்பித்தண்ணி வாங்கியாரச்சொன்னாரு.
சுல்த்தான் காப்பி குடிச்சிட்டு தீவாளிக்கி மொதநாள் வாரதாச்சொல்லிட்டு அட்வன்ஸும் குடுத்துட்டுகெளம்புனாரு சீனிச்சாமி இருங்கபாய் காப்பித்தண்ணி வாங்கியார போயிருக்கான் மகன்னாரு
அதுக்குள்ள அவன் போய் வாங்கியாந்து குடுத்தான் அதோட அகத்திக்கீர வாங்கிட்டு வந்ததைக் ஆட்டுக்குட்டிக்குக் குடுத்தான் அது ஆசையாத்தின்னுச்சு. அவன் தூக்குப்போணில வாங்கியாந்த டீய சொம்புல ஊத்திக்குடுத்தான் அவன் கண்ணு கெஞ்சிச்சு. பாய் சிரிச்சிக்கிட்டாரு
அப்புறம் தீபாவளிக்கு வாரதாச் சொல்லிட்டுக் கெளம்புநாரு
பாய் அவர் சொன்னமாதிரி தீவாளிக்கி மொதநாளு சின்ன வேனோட வந்துட்டாரு சீனிச்சாமிக்கிட்ட பேசுனபடி பணத்தக் குடுத்துட்டு ஆட்டுக்குட்டிகளை ஏத்துனாரு ..
இதுக்காகவே மகன தூங்கவைச்சிருந்தாரு சீனி
”சரிபோயிட்டுவாறேன்ன்னு வண்டிய க் கெளப்பு னவன்ன வீட்டுக்குள்ளாற இருந்து அலறியடிச்சி ஓடிவந்தான் மகன்
””என்கருப்ப விட்டுடுங்க என் கருப்பு கருப்பு”ன்னு அழுதான் சீனி
“ லேய் சும்மாரு காசெல்லாம் வாங்கியாச்சு வேற ஆட்டுக்குட்டி வாங்கி வளத்துக்கலாம்” ன்னாரு.. அவன் கேக்கல அழுது பொறண்டான்
“சின்னப்பய அப்புடித்தானிருப்பான் ரெண்டு நாள்ல சரியாயிடுவான் . நீங்க போங்க-பாய்” ன்னாரு.
சுல்த்தான் வண்டியக் கெளப்பிட்டுப்போயிட்டாரு
ஆன ராத்திரிப்பூராம் தூங்கல அழுதுக்கிட்டே இருந்தான் அதுவும் அழுகுறமாதிரிக் கன வெல் லாம் வந்துருச்சு காலங்காத்தால சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டான் சுல்த்தான் பாய் கடைக்கிப்போனான்.
அங்க ரெண்டுமூணு ஆடு அறுத்துதொங்குச்சு. இவனோட கருப்பக்காணாம். பாய்கிட்டக் கேட்டான்” கருப்பு எங்க?”ன்னு.
அவரு சொன்னாரு
“ இந்தாத்தொங்குதுபாரு”ன்னு ஒரு ஆட்டக்காமிச்சாரு…. அய்யோ போயிட்டியான்னு அழுதுபொறண்டான் கல்லு மண்ணெல்லாம் எடுத்து அவர்மேல எறிஞ்சான். அவர் கண்டுக்கலைஅதுக்குள்ள கடையில இருந்த மகன் கிட்ட என்னமோ சொன்னாரு
இவன் எந்திரிச்சி அழுதுக்கிட்டே .இருந்தான்
கொஞ்ச நேரத்துல அவரு மகன் ஒரு ஆட்டுக் குட்டிய கூட்டியாரது தெரிஞ்சிதுபாத்தா அது கருப்பு. இப்ப பாய்கிட்டக் கெஞ்சினான் பையில இருந்துகொண்டாந்த காசக்காமிச்சு சொன்னான்
”இந்தாங்க பாய் காசு மீதிக்காச எப்புடியாவது சம்பாரிச்சிக்குடுத்துடுறேன் என் கருப்ப என்கிட்டக் குடுத்துருங்க”’ ன்னான், அவ்வளவு பாசமாடான்னாரு ஆமான்னான்.
அப்ப சுல்த்தான் சொன்னாரு
“நீ அங்க அழுதப்பவே நான் ஒரு முடிவெடுத் திட்டேன். அப்ப அங்க விட்டுட்டு வந்திருந்தா ஒங்க அப்பா வேறாஆளுக்கு வித்திருப்பாரு அதான் கொண்டாந்துட்டேன் தீவாளி முடிச்சி நானே கொண்டாந்து உன் வீட்டுல
விட்டுருப்பேன். .அதுக்குள்ள நீயே வந்துட்ட
கூட்டிட்டுப்போ ஒன்னோட கருப்ப என்மகன் உன்னயயும் கருப்பையும் ஒங்கவீட்டுல கொண்டாந்து விட்டுட்டு வெவரம் சொல்லிட்டுவருவான் ஒனக்கு தீவாளிப்பரிசா இந்த சுல்தான் தாறேன்”னாரு
அவன் கண்ணுல தண்ணி வந்துருச்சு பாய் கால்ல விழுந்துட்டான்
“ கருப்பத் திருப்பிக்குடுத்த சாமி நீங்க”ன்னு அழுதுக்கிட்டே சொன்னான்
அப்ப கொஞ்ச வருசம் முன்னாடிஇதே மாதிரி அவர்கிட்ட அவரோடஒரு மகன் அடம்பிடிச்சும் கேக்காம அவன் வளத்த குட்டிய வெட்டுனதுனால கோவிச்சிக்கிட்டு கெணத்துல விழுந்து செத்துப்போன அவரோட மகன் நெனப்புவந்து கண்ணுல தண்ணி ஊத்துச்சு
சுல்த்தான் கண்ணத்தொடச்சிக்கிட்டாரு அப்பவும் ஊரநோக்கிப்போயிக்கிட்டு இருந்த அவனும் கருப்பும் கலங்கலாதெரிஞ்சாங்க கண்ணீருக்குள்ள.