ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் குழந்தை என்பது சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு மிகப்பெரிய பாக்கியம் ஆகும். இந்நிலையில், நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு என்ற ஒரு நிகழ்ச்சி காலம் காலமாக நடத்தப்பட்டு தான் வருகிறது. மேலும் பெண்களுக்கு வயதுக்கு வருதல், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு முக்கியமாக நடத்தப்படுகிறதோ அதே வகையில் தான் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியும் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும் ஒரு சடங்காகும். இது எல்லா வகையான நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் நடத்தப்பட்டு தான் வருகிறது. கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு என்பது ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் நடத்துவார்கள். குறிப்பாக ஐந்தாவது மாதத்தில் ஐந்து வகையான சாப்பாடு செய்து வீட்டிலேயே சிம்பிளாக இந்த ஐந்து மாத வளைகாப்பு முடிப்பார்கள். ஆனால் ஒன்பது அல்லது ஏழாவது மாதத்தில் அனைவரையும் அழைத்து மிக பிரம்மாண்டமாக வளைகாப்பை நடத்துவார்கள். இந்தச் சடங்கு சீமந்தம் என்றும் கூறுவார்கள். இந்த சீமந்தம் நடக்கும் நாளில் கர்ப்பமான அந்த பெண்ணுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும், இதனால் அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்களாம். இந்த நிகழ்ச்சியில் பலவகையான உணவுகள் அந்த பெண்ணிற்கு கொடுக்கப்படும் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் குழந்தைக்கும் அதிகப்படியான சத்துக்களும் கிடைக்கும்.
மேலும், வளைகாப்பு நடக்கும் போது அந்த தாயின் கையில் உள்ள அதிகப்படியான வளையலின் சத்தம் அந்த குழந்தைக்கு கேட்கும் போது அது மிகவும் மகிழ்ச்சியை அளிக்குமாம். இதனால், குழந்தை வயிற்றினில் மிகவும் ஆரோக்கியமாக இருக்குமாம். மேலும் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது போடப்படும் வளையல் சத்தத்தினால் அந்தப் பெண் எங்கு செல்கிறார் என்பதை வளையோசையின் உதவியுடன் தெரிந்து கொள்ள முடியும் இதனால் அவர்களுக்கு ஏதாவது டெலிவரி பேன் வந்தால் கூட இந்த சத்தத்தை வைத்து நாம் கண்டுபிடித்து அவர்களை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம். மேலும் இந்த வளைகாப்பு என்பது எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய வாரிசு வரப்போகிறது என்பதை நாம் உற்றார் உறவினருக்கு கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைகிறது.