
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஆம்பாடி பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இங்கு இங்கு ரப்பர் சீட் சேமிப்பு கூடாரம் உள்ளது. இந்த குடோனில் மணி (70) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் (செப்.,23) மாலை வழக்கம் போல் பணியில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு வந்து குடோனுக்குள் நுழைந்து ரப்பர் சீட்டை திருட முயன்றார்.
சத்தம் கேட்டு மணி திருடனை மடக்கி பிடித்து விட்டார். ஆனால் திருடன் தன்னை விடுவித்துக் கொள்ள அருகில் கிடந்த பாறாங்கல்லை கொண்டு மணியின் தலையில் பலமுறை ஓங்கி அடித்துள்ளார். மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடன் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு வந்த ரப்பர் தோட்ட பணியாளர்கள் காயத்துடன் கிடந்த மணியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து கடையாலுமூடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சினாபகன் ( 54) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.