கவனித்திருக்கிறோமா?.. நம் வீட்டுக் குளியலறையைத் தூய்மை செய்வது யார்?.. படித்ததில் பிடித்தது..!!

கவனித்திருக்கிறோமா?

 

நம் வீட்டுக் குளியலறையைத் தூய்மை செய்வது யார்?

வேலை கிடைத்து வெளியூரில் வந்து தனியாக அறை எடுத்துத் தங்குவதற்கு ஒருநாள் முன்புகூட இது குறித்த எவ்வித சுரணையுமின்றி வீட்டுக் குளியலறையைப் பயன்படுத்தியவள் என்கிற முறையில் கேட்கிறேன், உங்கள் வீட்டுக் குளியலறையைத் தேய்ப்பதும் தூய்மைப்படுத்துவதும் யார்?

 

பெரும்பாலும் அம்மா. மிகச்சில வீடுகளில் அப்பா. வீட்டில் இருக்கிற அம்மாவுக்கு என்ன தான் வேலை?

காலியாகும்முன் மளிகைப் பொருள்கள் வாங்கி வைப்பது அல்லது வாங்கிவரப் பட்டியல் தருவது; காய்கள் வாங்குவது; அதே சாம்பார் அதே புளிக்குழம்பா என்கிற கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க இரவு தூங்கும்முன் கூட அடுத்தநாள் உணவு குறித்துச் சிந்திப்பது; துணிகளைத் துவைப்பது/ துவைக்க இயந்திரத்தில் போடுவது; எடுத்து உலர்த்தி மடிப்பது; காய்கள், பழங்கள், தின்பண்டங்கள் வாங்குவது/ வாங்கிவரச் சொல்வது; சமைப்பது; தீராத அட்சய பாத்திரம்போல் இட்லி தோசைக்கு மாவு தீராமல் பார்த்துக்கொள்வது; மிளகாய் மல்லி வாங்கி உலர்த்தி அரைத்து வைப்பது; இதற்கிடையே வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது; இருக்கிற மீதி ஓய்வுநேரத்தில் அப்பெண் தன்னுடைய குளித்தல், உணவு உண்ணல் போன்ற சிற்சில வேலைகளையும் செய்துகொள்ளலாம்.

 

இத்தனைக்கும் மத்தியில், எவர் எந்நேரம் வரினும் பயன்படுத்தும் விதமாக பளிச்சென்று அந்த பாத்ரூமை வைத்திருக்க அவள் படுகிற பாடு உள்ளபடியே பெரும்பாடு.

 

பீரியட்ஸ், காய்ச்சல், ஹார்மோன் கோளாறுகள் இவற்றினூடே தவறாது இந்தத் தேய்த்தலையும் செய்துவிட வேண்டும். கை கழுவும் சிங்க், பாத்ரூம் சுவர், தரை, இன்னபிறவற்றின் தேய்த்தல் சடங்கினை முடித்து நிமிர்வதற்குள் இடுப்பு வலியும் சேர்ந்துகொள்ளும்.

 

மேற்சொன்ன எந்த வேலையையும் அவளுக்கு யாரும் கட்டளையிடுவதில்லை. ஆனால் வேறு யாரும் அந்த எந்தவொரு வேலையையும் செய்யப்போவதுமில்லை எனும் சூழலில் வேறு என்னதான் செய்ய முடியும்?

 

அவள் வீட்டு நபர்களிடம் வேலையைச் செய்யச் சொல்லலாமே என்று தோன்றலாம். சொல்லிச் செய்ய வீட்டு நபர்கள் விருந்தாளிகள் அல்ல என்பதை அவர்கள்தாம் உணர வேண்டும்.

 

தவிர, வேலையைச் செய்யச் சொல்லி பிறரிடம் கேட்டு அவர் அதைத் தாமதிக்கும்போது அவள் அவமதிக்கப்பட்டதாகவே பொருள்படும் என்பதால் மரியாதை முக்கியம் என்பதற்காகவே எவரின் உதவியையும் நாடாமல் வேலையைச் செய்யப் பழகிவிடுகிறாள் பெண்.

 

உங்கள் வீட்டின் எந்த வேலையை நீங்களாகவே செய்கிறீர்கள்?

காய் வாங்குவது/ கடைக்குப் போவது எனில் அதன் பட்டியலை நீங்களே அறிவீர்களா எழுதிக் கொடுப்பதை வாங்கிவருவீர்களா? என்ன பெரிய வேலை. மாத சாமானைப் பட்டியல் போட்டால் போதுமே எனத் தோன்றலாம். எடுத்து வைப்பதையும் பத்திரப்படுத்தி அடுக்கி வைப்பதையும் அந்த டப்பாக்களைக் கழுவி உலர்த்துவதையும் மனிதர்தாமே செய்ய வேண்டும்?

 

உங்கள் வீட்டு அடுக்களையில் ‘இது எங்க இருக்கு?’ என்று ஒரு பொருள் குறித்துக் கேட்காமல் உங்களால் இரு வேலை உணவைச் செய்துமுடிக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்களேன்.

 

ஒரு வாரத்துக்கு உதவியாளரோ பணிப்பெண்ணோ வீட்டுப்பெண்களோ இல்லாத சூழலில் உணவகத்தை நாடாமல் உங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் எல்லாப் பணிகளையும் உங்களால் செய்துகொள்ள முடியுமா? ஆம் எனில் நீங்கள் தான் ஆகச் சிறந்த மனிதர். இல்லையெனில் ஆகச் சிறந்ததை எட்ட என்னவெல்லாம் சின்னச் சின்னதாய்ச் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் செய்யுங்கள்.

 

வீடு என்பது வீட்டிலுள்ள அம்மா, அப்பா, குழந்தைகள் என அனைவரையும் உள்ளடக்கியது. அங்கு நடக்கிற உழைப்புச் சுரண்டலிலிருந்து சிறிதளவு விடுதலை பெற்றாலே இன்னும் பல தூரங்களை நாம் எட்டலாம்.

 

வேலை என்பது தனிநபர்/ குடும்பத்தின் வளர்ச்சிக்கானதேயன்றி அதுவே நம்மை மென்று விழுங்கி தின்று செரிக்கும் இயந்திரம் அல்ல. அப்படி வேலையை நாம் அனுமதிக்கும் சூழலில் குடும்ப அமைப்பு என்று நம் மனத்தில் இருக்கிற பிம்பத்தின் வடிவம் ஒருநாள் சிதையும்.

 

அதில் நமது சித்திரம் என்று நாம் நினைத்துக்கொள்கிற சித்திரம் வேறு; நமது உண்மையான சித்திரம் வேறு என்பதைக் காலம் உணர்த்தும்போது எதுவுமே நம் பிடியில் இருக்காதென்பதால் நம் மகிழ்வுக்காக உழைப்போம்! வீட்டு மனிதர்களின் குரல்களுக்குக் காதுகொடுப்போம்!

Read Previous

உண்மை.. ஒரு ஆணின் எந்த அழகை பெண்கள் அதிகம் விரும்புவார்கள் தெரியுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

குடல் மிளகு வறுவல் குழம்பு செய்வது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்வோம் : ஒருமுறை சமைத்தால் பலமுறை ருசிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular