காரியம் (சிறுகதை).. கண்களில் நீரை வர வைக்கும் அருமையான சிறுகதை..!!

காரியம்( சிறுகதை)
கிட்டத்தட்ட சொந்தக்காரங்க எல்லாத்தையும் வரச்சொல்லியாச்சு, அவருக்கு ஒரே மகன் அவந்தான் எல்லாம் செய்யனும், ஏற்கனவே போனவருசம் அவரோட சம்சாரம் இறைவனடி சேர்ந்து விட்டதால் அன்றிலிருந்து இவர் ஒரு பிடிப்பில்லாமல் தான் இருந்தார். ஒழுங்கா மாத்திரை சுகருக்கும் பி.பிக்கும் எடுப்பதில்லை
ஏன்னு கேட்டா அவர்
”இனிமே இருந்து என்ன பண்ணப் போறேன் இந்த மாத்திரைகளைச் சாப்புட்டு உடம்பை காப்பாத்தி உசிரைப் புடிச்சி வைச்சி என்ன செய்யப்போறேன் அவ இருந்தவரைக்கும் ஒரு பிடிப்பு இருந்துச்சு அவ போனப்புறம் எல்லாமே போய்ட்டமாதிரி இருக்கு சீக்கிரமே அவபோன எடத்துக்கு நானும் போய்ச்சேர்ந்துடலாம்னு தோணுது” என்பார்
” ஏன் நான் உங்க மகன் உங்க மருமக பேரப்பிள்ளைக எல்லாம் இருக்கோம் எங்களுக்கு நீங்க வேணும் பா நாங்க உங்களைப் பாத்துக்க மாட்டோமா?”
” அதான் என்னுடைய பிரச்சனையே நீங்க எனக்காக எல்லாம் செய்யனும்றதுக்காக உங்க விசயங்கள் பாதிக்கப்படுது எங்கயும் என்னதனியா விட்டுட்டுப் போக முடியல
உங்களோட டூர் புரோக்கிராம் எல்லாம் தள்ளி வைக்கிறீங்க மருமக அவங்க அம்மா அப்பாவைப்போய் பார்க்கமுடியல என்னக்கவனிக்காம விட்டுட்டு எப்புடிப்போறதுன்னு யோசிக்கிறீங்க அதுனால அவங்க பலமுறை வந்து அவளைப் பாத்துட்டுப்போய்ட்டாங்க நான் உங்க எல்லாருக்கும் பாரமா இருக்குறேன்”
” அப்படிச்சொல்லாதீங்கப்பா நீங்க எனக்காக என்னென்ன தியாகம் பண்ணுனீங்க அதை எல்லாம் நான் மறந்துர முடியுமா? உங்களைப் பாக்கவேண்டியது என் கடமை இல்லயா ? இது எனக்குச் சந்தோசம் தார விசயம் நீங்க என் கூட இருக்குறது எனக்கு பலம்”
“அதெல்லாம் சரிதான் என்னால அவ இல்லாத இந்த ஒலகத்துல இருக்கப்பிடிக்கல அவ்வளவுதான் அதுக்காக தற்கொலை எல்லாம் செஞ்சிக்கமாட்டேன் பயப்படாத எனக்கு என்மேல் இருக்குற ஆசை போய்டுச்சு அவ்வளவுதான்”
இப்படிச்சொல்லியே தன்னைத்தானே மருந்து மாத்திரை சாப்பிடாம கெடுத்துக்கொண்டார் பிரச்சனை அதிகமாகி ஆஸ்பத்திரிக்குப் போனப்ப டாக்டர் சொல்றதை சீரியஸ்ஸா கேட்டார் அத்தோடு சரி மறுபடி அதே கதைதான் இப்ப முழுசா ஒடம்பு கெட்டுப்போய் தன்னோட முடிவை தானே வரவழைச்சிக்கிட்டார்
அவரைப்பார்க்க ப் பாவமா இருந்துச்சு நம்மால ஒன்னும்செய்யமுடியலையேன்னு வருத்தமா இருந்துச்சு.
இம்புட்டுக்கும் அவர் தன்னோட இறுதிகாரியங்களுக்காக 3 லட்சம் தனியா பேங்கில போட்டு வைச்சிருந்தார்
அம்மா இறந்தப்ப அவங்களோட காரியங்களைச் செய்யவந்த சாஸ்த்திரிகள் 3 லட்சரூபாய் 5 லட்சரூபாய் பேக்கேஜ் களைச் சொல்லி வசதி இருக்குவங்க அவங்க விருப்பப் படி செய்யலாம் சிம்பிளாவும் செய்யலாம் னு சொன்னப்ப அப்பா அம்மாவுக்காக 3லட்ச ரூபாய் கொடுத்து அவங்களோட ஈமக் காரியங்களை நடத்தி வைச்சார். அப்ப அவர் சொன்னார் “ அவளுக்கு பக்தியும் சாஸ்த்திர சம்பிரதாயங்கள் மேல நம்பிக்கையும் அதிகம் அதுனால அவ அதைச் செய்யச்சொல்லிருக்கா அவ விருப்பத்தை நிறைவேத்தி வைக்கிறது என் கடமை” நு சொல்லி நடத்திவைச்சார்
இப்ப அவர் என்னை அழைத்துச்சொன்னார்
“ நான் போனதுக்கு அப்புறம் அம்மாவுக்கு மாதிரி எனக்கு நீ செலவு செய்யவேண்டாம் அதுக்குன்னு நான் 3லட்ச ரூபாய் பேங்கில் போட்டு வைச்சிருக்கிறேன் அதை அம்மாவுக்கு மாதிரி காரியங்கள் செய்ய வேணாம் ஏற்கனவே சாஸ்த்திரி சொன்னமாதிரி சிம்பிளாவும் செய்யலாம்னு சொன்னாரே அது மாதிரி சிம்பிளா செஞ்சிடு”
” அப்ப அந்தக்காச வைச்சி நான் என்ன பண்ணுறதுப்பா அது உங்க காசு உங்களுக்குத்தான் செலவு செய்யனும் அதுதான் தருமம்”
“ அந்தக்காசில 3 லட்சரூபாயை முதியோர் இல்லம் நம்ம ஊரில இருக்குஅங்க கொண்டுபோய் குடு கடைசிக்காலத்துல வாழும் அந்த ஜீவன்களுக்கு அது உபயோகமா இருக்கும் செத்தபின்ன செலவு செஞ்சி என்ன சொர்கத்துக்கு அனுப்ப வேண்டாம் அது என்னோட கர்மாப்படி நடக்கட்டும் அங்க பாவம் செலவுக்கு ரொம்பச்சிரமப்படுறாங்க எனக்குச் செலவு செய்யிறதா நெனச்சி அவங்களுக்குப் பண்ணு அதான் என்னோட ஆசை”
“ சரிப்பா அங்க நீங்க சொன்னமாதிரி உங்க பணத்தைக் குடுத்துறேன் என்னோட செலவில பெத்த அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமையச்செய்யிறேன் அதில் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
” அது மாதிரித்திட்டம் இருந்தா எனக்காக என்ன செலவு பண்ணுவீயோ அதையும் அங்கேயே கொண்டுபோய் குடுத்துரு உனக்கும் புன்னியமாய்ப் போகும்”
” எனக்குன்னு ஆசை இருக்கக்கூடாதாப்பா? உங்களுக்கு நான் செய்யகூடாதா? உங்களுக்கு வேன்னா அந்தச்சடங்குகள் மேல நம்பிக்கை குறைவா இருக்கலாம் எனக்கு இருக்கேப்பா நாளைக்கு என் மனசாட்சி என்னைக் கேக்காதா?”
” காசு அதிகமாச் செலவுசெஞ்சாத்தான் பலன் கம்மியாச்செலவு செஞ்சா பலன் இல்லைன்னு யாருடா சொன்னது எவ்வளவு நம்பிக்கை யோட செய்யிறமோ அதுதான் முக்கியம் இன்னிக்கிப் பசியோட இருக்குறவங்க வயித்த நெறப்புறது தான் செத்தபின்னாடி படையல் வைக்கிறதவிடச்சிறந்ததுன்றது என் நம்பிக்கை அதிகமாச்செலவு செய்யிறவன் தான் சொர்கத்துக்குப்போவான்னா பணக்காரவங்க மாத்திரம் தான் போகமுடியும் ந்றது சரியாவா இருக்கு?
“ இதுல பணம் இல்லைப்பா பிரச்சனை மனசுதான் எங்க அப்பா அம்மாவுக்குப் பண்ணுனமாதிரி நான் அவருக்கு முறைப்படி எல்லாம் பண்ணனும்னு நெனைக்கிறேன் அவ்வளவுதான்”
“ நான் சொல்றதைச் சொல்லீட்டேன் போன பின்னாடி நீ என்ன பண்ணுறன்னு வந்து பாக்கவா போறேன் உனக்கு எது நல்லதுன்னு படுதோ அதைச்செய் ஆனா என் பணத்தை அங்க கொண்டுபோய் குடுத்துரு அது என் விருப்பம் அதை நிறைவேத்து அப்புறம் உன் விருப்பம் என்றாலும் உன் விருப்பத்தில் எனக்கு உடன்பாடில்லை அவ்வளவுதான் “ என்று சொல்லி முடித்துக்கொண்டார்
இது நடந்து 3 நாட்களில் அவர் இயற்கை எய்தினார். அப்போது மகனின் மனைவி கேட்டாள் ”என்ன செய்யப்போறீங்க” ?
” அவர் விருப்பப்படியே செய்துவிட்டு அங்கே இருக்கும் முதியவர்களை அடிக்கடி சென்று பார்த்து என்னை நானே தேத்திக்கிறதுன்னு முடிவெடுத்துட்டேன்”
அப்பா இறந்து ஒரு வாரம் ஆனது அவர் சொன்னதுபோல சிம்பிளாக காரியங்களை முடித்துவிட்டு அவர்பணம் 3 லட்சம் என்பணம் 3 லட்சம் எடுத்துக்கொண்டு அவர் சொன்ன முதியோர் இல்லத்துக்குப் போனான் மகன்
அங்கே அவரின் அப்பா சொன்னது போலத்தான் நிலைமை அதன் நிர்வாகியைச் சந்தித்து அப்பா சொன்னதைச்சொல்லி பணத்தைக்கொடுத்தார் அவர்
அப்போது அவர் சொன்னார்” உங்க அப்பா இங்கு அடிக்கடி வருவார். எதுக்குத்தெரியுமா? அவரின் நண்பர் இங்கு ஒருவர் இருக்கிறார் அவரை அவரின் பிள்ளைகள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இங்கே வந்து சேர்த்துவிட்டார்கள் இங்கு பணம் வரும்போது பணம் கட்டிச்சேர்ப்பார்கள் கொஞ்சநாளில் பணம் வராது அதற்காக நாங்கள் இவர்களை அனுப்பிவிட முடியுமா? அதுமாதிரிதான் உங்கள் அப்பாவின் நண்பர்கள் பிள்ளைகள் திரும்பிப் பார்க்கவில்லை அப்போது உங்க அப்பா வந்து சொன்னார் பணம் ஏற்பாடு செய்வதாக அதைத்தான் உங்களைச் செய்யச் சொல்லி யிருக்கிறார் நீங்கள் மேலும் உங்களின் பணம் சேர்த்துக்கொண்டுவந்து கொடுத் திருக் கின்றீர்கள் ரொம்ப நன்றி “
அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அப்பாவின் நண்பர் அங்கு வந்தார் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் அதன் நிர்வாகி.இவனைப்பார்த்ததும் அவருக்குத்தாங்க முடியவில்லை “ அவன் போய்டானா? என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார்
அப்ப நிர்வாகி இவன் பணம் கொடுத்த விசயத்தைச்சொன்னார் அதைக்கேட்டதும்
அவர் சொன்னார்
”என்னால் என்பிள்ளைகள் பணம் கட்டாதபோது இங்கு இருக்கக் கூசியது தன்மானம் உள்ள எவருக்கும் அது தோணும் அப்ப உங்க அப்பாதான் வந்து பணம்கட்டினார் அதன்பின் தான் எனக்கு சமாதானம் ஆனது உங்க அப்பாவைப்போல் இன்னொருத்தாரைப் பார்க்கமுடியாது அவர் ஒரு சிந்தனையாளர் நிதர்சனவாதி,என் நண்பர் அவரை எப்போது பாரப்பேன்” என்று அழுதார்
அப்பொழுது இவன் கெட்டான் ”உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள் எனக்கு என் அப்பாவைப்பார்த்த திருப்தி இருக்கும் இதை வேண்டுகோளாக வைக்கிறேன்”
“ வேண்டாம் மகனே நான் மறுபடியும் ஒருவருக்குப் பாரமாக விரும்பவில்லை என்னை மன்னிச்சிருப்பா உன் அன்பு புரிகிறது ஆனால் அதை என்னால் ஏற்க முடியாது ஏன்னா நான் உங்கள் வீட்டில் வந்து இருந்தால் அது என் பிள்ளைகளுக்கு அவமானம் அதனால்பல பிரச்சனைகள்வரும் நான் இங்கு இருக்கும் வரை அவர்களை யாரும் பணம்கட்டினீர்களா என்று கேட்கமாட்டார்கள் ஆனால் அங்கு நான் வந்தால் அந்தக்கேள்வி எழும்? வேண்டாம் உன் அன்பிற்கு நன்றி என்று சொல்லும் போது அவர்கண்களில் நீர் ஆறாக ஓடி வழிந்தது
இவனும் கண்களைத்துடைத்துக்கொண்டான்.

 

Read Previous

நம் அனைவரின் வாழ்விலும் இப்படி ஒருவர் கண்டிப்பாக இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும்..!!

Read Next

அனைத்து ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு முக்கியமான பதிவு பெண்களைப் பற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular