Oplus_131072
இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்கள்!!!!! காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா?
அந்த இட்லிக்கு ஒரு அற்புதமான சுவையில் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னியை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் இன்று அந்த சட்னியையே வீட்டில் செய்யுங்கள்.
இந்த தக்காளி கார சட்னி ருசியாக இருப்பதன் ரகசியம், அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் காரணம். அது தான் புளி. பொதுவாக தக்காளியிலேயே புளிப்புச் சுவை இருக்கும். இருப்பினும் அதில் சிறிது புளி சேர்க்கும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த தக்காளி கார சட்னியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், பின் அடிக்கடி செய்து தர சொல்வார்கள்.
உங்களுக்கு ஹோட்டல் தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 3 டீஸ்பூன்
* பூண்டு – 8 பல்
* வரமிளகாய் – 8
* காஷ்மீரி வரமிளகாய் – 4
* பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
* புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
* பெரிய தக்காளி – 3 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 1
* கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அரைத்த சட்னியை அதில் ஊற்றி, 3 நிமிடம் நன்கு கிளறி வேக வைத்து இறக்கினால், சுவையான தக்காளி கார சட்னி தயார். செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்….




