
- சூளகிரி அருகே லாரியில் கடத்திய ரூ.4.13 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரியில் கடத்திய ரூ.4.13 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரியில் கடத்திய ரூ.4.13 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஓட்டுநரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வழியாக கர்நாடகாவில் இருந்து குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சூளகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சூளகிரி அடுத்த காமன் தொட்டி பகுதியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து போலீசார் சோதனையிட முயன்றனர். அப்போது ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த நபர் லாரியை நிறுத்தி தப்பியோட முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஓட்டுநரை மடக்கிப் பிடித்து லாரியில் சோதனை இட்டனர்.அப்போது லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து லாரியில் இருந்த ரூ.4.13 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை கடத்தியது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்த சூளகிரி போலீசார் தப்பியோடிய மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.