
- அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு வர தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து கேரளா மாநில சுகாதாரத்துறை பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கவும், சுத்தமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் 2 பேர் டெங்கு காய்ச்சலாலும், 2 பேர் எலிக் காய்ச்சலாலும், ஒருவர் H1N1 வைரஸ் காய்ச்சலும் என மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 12,728 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கேரளாவில் 4 வகையான டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு காய்ச்சலால் ஒரே மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.