
கொழிஞ்சி செடி யாருக்கு எல்லாம் தெரியும்? தூத்துக்குடியில் மணல் பாங்கான இடத்தில் மழை ஈரமே இல்லாத வரண்ட பூமி மாதிரி இடத்தில் சிறு தூரல் போட்டதும் இந்த கொழிஞ்சி தலை தூக்கும். இதை யார் விதைத்தார்கள் எப்போது ஊன்றி இருப்பார்கள் என்பன போன்ற கேள்விகள் என் சிறு வயதில் நிறைந்து இருந்தன.
கொழிஞ்சி ஒரு குத்து செடி. அதில துக்கிளியூண்டு பூ பூக்கும் பாருங்க! என்ன வண்ணம்? விந்தை தான்.
எங்க ஆச்சி சொல்லுவா இத சவட்டி விடுவாங்க வயலில்… நெல்லுக்கு நல்ல உரமாக்கும் என்று.
அது கேட்கவே பிடிக்காது எனக்கு. ஏன் அதை சவட்டணும்? ஏன் அந்த அழகிய குட்டி செடியை ரசிக்க கூடாது? அந்த வயதில் அது ஒரு இயற்கை தளை உரம் என்பது தெரியாது.
நெல் வெளைய தண்ணீர் நிறைய வேண்டும். அப்படி பட்ட பயிர்களுக்கு விதைப்பதற்கு முன் 60 நாட்கள் இருக்கையில் கொழிஞ்சியை விதைத்து பின் இந்த பசுந்தாள் உரப் பயிரை மடக்கி உழுது விடுவாங்க. மற்ற எந்த உரத்தைக் காட்டிலும் கொழிஞ்சி சிறந்த உரம்னு ஆச்சி சொன்னதையே இயற்கை விவசாயம் சொல்கிறது. யாரு கேக்காங்க?
இதுல இன்னோர் விஷயம். இந்த கொழுஞ்சி பூக்க ஆரம்பிக்கு முன்னரே உழுதுருவாங்க. ஆமா பின்ன பூத்தாச்சுனு சொன்னா விவசாயியையும் அது மடக்கி விடும் தன் அழகால. அப்புறம் நெல் விளைவிக்க விவசாயி மறந்துவாரே! அவ்வளவு அழகு அந்த துக்கிளியூண்டு கொழிஞ்சிப்பூ.