கோயில் பிரசாதங்களும் அவற்றின் விசேஷ அம்சங்களும்..!!

Oplus_131072

கோயில் பிரசாதங்களும் அவற்றின் விசேஷ அம்சங்களும்..!!

ஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு #பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக, பிரதோஷம், கார்த்திகை, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி மற்றும் எண்ணற்ற விசேஷங்களுக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்கள். அதை இரண்டு கைகளால் பெற்று இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும். இங்ஙனம் செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காகப் பிறப்பார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். ஒருசிலர் அதை ஒரு கையால் வாங்குவார்கள். இன்னும் ஒருசிலர் வாங்கியதை தனது கையில் வடித்து விடச் சொல்லுகிறார்கள். அது சரியானது அல்ல. விலங்குகள்தான் வாயினால் சப்பி சாப்பிடக்கூடியவை. ஏனென்றால், அவற்றுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக்கொள்ளத் தெரியாது. ஆனால், நமக்கு இறைவன் இரண்டு கைகளை கொடுத்திருக்கிறான்.

அது மட்டுமில்லாமல், தீர்த்தம் வழங்கும்போது அதனை இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும். உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால்தான் எழுந்தவுடன் நாம் உள்ளங்கையை பார்க்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பொதுவாக, கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் அந்தக் கோயிலில் அருளும் கடவுளுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். கணபதிக்கு பிடித்தமானது சர்க்கரை பொங்கல், மோதகம், அவல், கொண்டைக்கடலை, அப்பம் ஆகும். முருகப்பெருமானுக்குப் பிடித்தமானது சர்க்கரைப் பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு, துள்ளு மாவு, பழங்கள், வெல்லம், பஞ்சாமிர்தம் போன்றவற்றை படைக்கலாம். மகாவிஷ்ணுவுக்கு எல்லாமே பிடிக்கும். லட்டு, பொங்கல், புளியோதரை படைக்கலாம். அன்னை மகாலட்சுமிக்கு பிடித்தமானது அரிசி பாயசம். குரு பகவானுக்குப் பிடித்தமானது கொண்டைக்கடலை அனைத்து வகையான இனிப்புகளுமாகும்.

ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் படைப்பார்கள். ராகு, கேது, சனி பகவானுக்கு கருப்பு எள் சாத பிரசாதம், பலகாரங்களைப் படைக்கலாம். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நெய்வேத்தியம். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாரமும் இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்தப் பிரசாதங்கள் இறைவனுக்கு படைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மதுரை அழகர்கோயில் தோசை பிரபலமானது. முழு உளுந்தை ஊற வைத்து மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றி தயாரிக்கப்படும் இந்த தோசைதான் இறைவனுக்கு படைக்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் புழுங்கரிசி சோறு, பாகற்காய் சாறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீ முஷ்ணம் கோயிலில் சுவாமி அபிஷேகத்திற்குப் பிறகு முஸ்தாபி சூரணம் என்னும் மகா பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவகிரக சுக்ர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்போது பிரசாதமாக அன்னம் வழங்கப்படுகிறது. திருக்குற்றாலத்தில் சுக்கு காபி நிவேதனம் செய்யப்படுகிறது. கோயிலின் பின்னால் அருவியில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருப்பதால் சுவாமிக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்பதால் இந்த சுக்கு காபி நிவேதனம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலி, பூமா தேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாத கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறு சர்க்கரை பொங்கல் நிவேதனமாக செய்வார்கள். துவரம் பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவது இந்தக் கூட்டாஞ்சோறு. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கசாயம் பிரசாதமாக தரப்படுகிறது.

கேரள மாநிலம், மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளை சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கேரள மாநிலம், கொட்டாரக்கரை விநாயகப் பெருமானுக்கு சுடச் சுட நெய்யப்பம் செய்து விநியோகம் செய்துகொண்டே இருப்பார்கள். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதியாக இவர் உள்ளார். கேரள மாநிலம், குருவாயூரில் அருளும் குருவாயூரப்பனுக்கு சுண்டக் காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாகப் படைக்கின்றனர். பிரசாதங்களை சுவாமி மீது நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும்போதுதான் நமக்கு அதன் முழு பலனும் கிடைக்கும். பிரசாதம் என்பது சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்ததிலிருந்து நமக்கு விநியோகம் செய்வதாகும். இதில் சுவாமியின் பலன் இருக்கிறது என்பது உண்மை. சுவாமி பிரசாதங்களை சுவாமியே நமக்குத் தருவதாக ஐதீகம். அதனால் பிரசாதத்தை முதலில் சொன்னது போல பெற்று சாப்பிட்டு இறைவனின் அருளைப் பெறுவோம்.

Read Previous

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்..!!

Read Next

கருப்பு( அருமையான சிறுகதை)..!! படித்ததில் கண்ணீரை வர வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular