நாமக்கல் மாவட்டம் வெப்படை அம்மன் கோவில் பகுதியில் தனியார் நூல்மில் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றி செல்ல அந்த மில்லுக்கு சொந்தமான பஸ் உள்ளது. அந்த பஸ்சை இருப்பாளி பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 44) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்த பிறகு 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் வெப்படையில் இருந்து புறப்பட்டது.
நேற்று காலை 7 மணியளவில் சங்ககிரி ஒருக்காமலை அருகே பஸ் வந்துகொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ் எதிரே கொங்கணாபுரத்தில் இருந்து ஈரோட்டை நோக்கி வந்த அரசு பஸ் மீது உரசியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் முன்பகுதி நொறுங்கியது.
இதில் பஸ்சில் இருந்த 13 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சேதமடைந்த பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.