
அதாவது, சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாலே, வீட்டில் இருந்து செல்லும்போதே நெற்றியில் திருநீறு இட்டு மனதிற்குள் ஓம் நமசிவாய அல்லது சிவாய நம என்ற மந்திரத்தை நினைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். பின்பு கோவிலுக்குள் நுழைந்த பின்னர் முதலில் நந்தி பகவானை கும்பிட்டு விட்டு, பின்னர் மூலவர் சன்னதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வில்வ இலைகளையாவது எடுத்து சென்று சிவனை தரிசிக்க வேண்டும். மேலும், வில்வ இலையில் மாலை கட்டி சென்றும் சிவபெருமானுக்கு அணிவிக்கலாம். அப்படி செய்யும் போது வில்வ இலை நுனியில் மஞ்சள் துணியில் 11 மிளகுகளை கட்டி வைத்து சிவபெருமானுக்கு அணிவிக்கலாம். பின்னர் அர்ச்சகரிடம் கூறி வில்வ மாலையில் கட்டிவைத்த மிளகு முடிச்சை வீட்டிற்கு வாங்கி சென்று, தினமும் ஒரு மிளகு வீதம் 11 நாட்களுக்கு சாப்பிட்டு வர நோய்கள் தீரும் மற்றும் நேர்மறை ஆற்றல் உருவாகும். மேலும், சிவனை கும்பிட்ட பிறகு மற்ற தெய்வங்களை சென்று தரிசனம் செய்தபின் கோவிலில் உள்ள ஒரு இடத்தில் அரை மணி நேரமாவது உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும். முடியாதோர் சிவனுக்கு உரிய மந்திரங்களை மனதிற்குள்ளேயோ அல்லது வாய்விட்டோ கூட படிக்கலாம். முடிந்தவரை இவ்வாறு சென்று சிவனை வழிபடுவது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.