
எல்லோர் வீட்டிலும் ரசம் என்பது ஒரு சுவையான உணவின் பதார்த்தம் மட்டுமல்ல உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய செரிமானத்தை மேம்படுத்தக்கூடிய உணவு அப்படிப்பட்ட ரசத்தை ஒரே விதத்தில் வைக்காமல் அவற்றை பல விதங்களில் சுவையாக செய்து பரிமாறினால் இன்னும் சுவைக்கூடுமே நமது நாக்கில்..
தினமும் ரசம் வைக்கும் பொழுது ஒரே மாதிரியான ரெசிபி பயன்படுத்தாமல் வித்தியாசமான ரெசிபிகளை செய்து வைத்தால் வீட்டிலுள்ளவர்கள் உங்கள் சாப்பாட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆந்திராவில் பிரபலமான பச்ச புலுசு ரசம், அடுப்பு இல்லாமல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
* மிளகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 6
* பூண்டு – 5 பல்
* பச்சை மிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
* புளி – 1 எலுமிச்சை அளவு
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் இடி உரலில் 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 6 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்று பின் ஒன்று சேர்த்து தட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு, நீர் ஊற்றி அதனை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறிய புளியை இரு கைகளால் நன்றாக பிசைந்து வடிக்கட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள மிளகு சீரகத்தைப் போட்டு, அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி நீரையும் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் ரசத்தில் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்.
இறுதியாக சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட்டால், சுவையான பச்ச புளி ரசம் தயார். அனைவரும் ருசித்துப் பாருங்கள்.!!