
- லட்டு செய்முறை
தேவையான பொருட்கள் :
* கடலை மாவு கால் கிலோ
* சர்க்கரை அரை கிலோ
* நெய் 3 டீஸ்பூன்
* முந்திரி 10
* ஏலக்காய் 10
* உலர் திராட்சை 20
* மஞ்சள் கலர் பொடி ஒரு சிட்டிகை
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும்.
முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, தேவையான தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்.
குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்.
கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும்.
பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். பதமாக வெந்ததும், பூந்தியை அரிகரண்டி கொண்டு அரித்து எடுத்து, சர்க்கரைப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.
பின்னர் உடைத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்.
சிறிது சூடு ஆறிய உடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.