சென்னையில் உள்ள தி.நகரில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது தொடர்ந்து கமலாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் மாம்பலம் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் அந்த நபர் வேலூர் மாவட்டத்தில் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சோதனைகளில் இது போலி மிரட்டல் என்பது தெரிய வரவே இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
இதே போல் நேற்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வருமானவரி துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டலும் போலி என்பதும் தெரிய வந்தது .கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.