
சேலம் அருகே சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஓடிசா ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீசார் தொடர்ந்து ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திப்ரூகர்- கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவம்பர் 19) ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.
இதில் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அந்த ரயிலில் ஏறி ஈரோடு ரயில் நிலையம் வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டனர். இதில் முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது அதனை திறந்து பார்த்தபோது பிளாஸ்டிக் கவர் பண்டல்களில் 5 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கடத்தி வந்த மர்ம நபர் போலீஸ் சோதனை பார்த்ததும் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.