
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாதிரிப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் ஜெயபால் (41). இவருக்கும் இவரின் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுக்கு இடையே பொதுவான நிலத்தை பிரித்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் ஜெயபால் என்பவருக்கும் சகோதரி மற்றும் சகோதரனுடன் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று ஜெயபால் வீட்டிற்கு தங்கை வசந்தா வந்துள்ளார். இதை அறிந்த அவர்களின் சகோதரர் பாஸ்கர் வசந்தாவை பார்த்து கோர்ட்டில் கேஸ் போட்டுவிட்டு ஏன் இங்கே வந்தாய் என தகாத வார்த்தையால் திட்டி அருகில் இருந்த மூங்கில் குச்சியால் வசந்தாதா, ஜெயபால், ஜெயபாலின் மனைவி சங்கீதா ஆகிய மூன்று பேரையும் அடித்து தாக்கியுள்ளார். மேலும் சங்கீதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்ததாகவும் இதில் காயமடைந்த மூன்று பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து தோகைமலை போலீசார் பாஸ்கர் மீது நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.