சோம்பேறி சிக்கன் செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
மசாலாக்கள் சேர்த்த பிறகு 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ரெசிபிக்கு வெங்காயம் நிறைய சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை தூவி கொள்ளவும்.
பிறகு மூன்று ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். சிக்கனை பிசைந்த பிறகு இதனை மூடி போட்டு ஒரு அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிடலாம். இந்த அரை மணி நேரத்தில் நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் சிக்கனுடன் சேர்ந்து நன்றாக ஊறி வந்திருக்கும். அதன் பிறகு நாம் சிக்கனை வறுக்க தொடங்கலாம்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்துக் கொள்ளவும். நாம் சிக்கனில் எண்ணெய் சேர்த்திருப்பதால் தனியாக எண்ணெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. நாம் பிசைந்து வைத்திருக்கும் சிக்கனை அப்படியே சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும். இரண்டு நிமிடங்களில் சிக்கனிலிருந்து தண்ணீர் வெளி வந்து இருக்கும் இப்பொழுது இதனை கிளறி விடவும்.
உப்பை மட்டும் சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கலாம். அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்கவும். சிக்கனிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும். சிக்கன் நன்றாக வெந்து சுருண்டு வந்ததும் இதனை அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறலாம் அவ்வளவுதான் எளிமையான சோம்பேறி சிக்கன் தயார்.