விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் புகழேந்தி. இவர் உடல்நல குறைவையின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி உயிர் இழந்தார். இதனை தொடர்ந்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பது “விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பத்தாம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதிக்கு வரும் பத்தாம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அந்த தொகுதிகள் உள்ள அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு வசதியாக அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் பத்தாம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்”, என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.