
கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் கிளையிலிருந்து அரசு டவுன் பஸ் கரூரிலிருந்து பரமத்தி வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த கார் திடீரென எடுக்கப்பட்டதால் பேருந்து காரில் மோதுவது போல் சென்று நின்றது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த ஆசாமிகள் சிலர் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு டவுன் பஸ் ஓட்டுனரை அடிக்கச் சென்றதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டார். இதனால் ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் , கரூர் , மதுரை, திண்டுக்கல் பகுதியிலிருந்து பரமத்தி வேலூருக்கு வரும் அனைத்து வாகனங்களும் , நாமக்கல் , சேலம், பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் அனைத்து வாகனங்களும், ஜேடர்பாளையம் செல்லும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் சமாதானம் செய்து அரசு பேருந்து ஓட்டுநரை பேருந்து எடுத்து காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். அரசு டவுன் பஸ் எடுக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் வரிசையாக சென்றன. அரசு டவுன் பஸ்சை நிறுத்திய போதை ஆசாமிகள் போலீசாரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு டவுன் பஸ் நடு ரோட்டிலேயே நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரமத்தி வேலூர் போஸ்ட் ஆபீஸ் எதிரே சாலை ஓரத்தில் நெடுகிலும் கார்கள், வேன்கள் தினமும் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் தினமும் நிறுத்தி வைக்கப் படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே காவல் துறையை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் தினமும் நிறுத்தி வைக்கப்படும் அனைத்து வாகனங் களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செய்ய வேண்டு மென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.