
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வீரன்செட்டி ஊரணி பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன் (47). இவர் பொன்னமராவதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த நகைகளை திருடி சென்றார். சிறிது நேரம் கழித்து அழகப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அழகப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அக்கம் பக்கம் சென்று பார்த்தனர். அப்போது புதுவளவு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அழகப்பனுக்கு சொந்தமான 4 சங்கிலிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சரமாரியாக தாக்கி பொன்னமராவதி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பொன்னமராவதி அருகே ஆலவயல் கம்மங்காடு பகுதியை சேர்ந்த ராஜா (34) என்பது தெரியவந்தது.
பின்னர் அவர் வைத்திருந்த நகைகளை பரிசோதனை செய்தபோது அது கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் ராஜா ஏமாற்றம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து திருமயம் கிளை சிறையில் அடைத்தனர்.