தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி தற்பொழுது ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பது “கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி தற்போது ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் விற்பனையிலும் புதிய இலக்கை எட்டி தென்னிந்திய மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆவின் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமாக இருந்தும் அதற்கான ஒரு தனித்துறை அமைச்சர், கணக்கற்ற அதிகாரிகள் இருந்தும் பால் கொள்முதலிலும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் பல்வேறு ஆண்டுகளாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளனர். கர்நாடகாவில் நந்தினிக்கு பாடம் கற்றுத் தந்த தமிழகத்தின் ஆவின் நிலை தற்போது மிக மோசமாக உள்ளது.
தனியார் பால் நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல் ஆவின் தொடர்ந்து கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றது. பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் அதற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தேவையற்ற பணி நியமங்கள் தளவாடங்கள் கொள்முதல் என்று பல கோடி ரூபாயை தமிழக அரசு வீணடித்து வருகின்றது. தமிழகம் தற்போது 34 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்து வருகின்றது. ஆவின் நிறுவனமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமா..?”, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.